×
Saravana Stores

நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன

*ஒரே மையத்தில் வழங்குவதால் ஆசிரியர்கள் அவதி

நெல்லை : நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் நேற்று மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்பட்டன. மாவட்டம் முழுமைக்கும் ஒரே மையம் காரணமாக ஆசிரிய, ஆசிரியைகள் அவற்றை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் வரும் ஜூன் 6ம் தேதி திறக்கின்றன. பள்ளிகள் திறந்த அன்றே மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை வழங்கிட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக இலவச புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை பிரித்து அனுப்பும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் முழுமைக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள் பேட்டை காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் வந்து இறங்கியுள்ளன. அங்கிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நோட்டு புத்தகங்கள் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கிடும் வகையில், அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒரு குழுவாக நேற்று நெல்லைக்கு வந்து வாடகை வாகனங்களில் புத்தகங்களை பெற்று சென்றனர்.

கல்வி அலுவலக அதிகாரிகள் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளின் மொத்த எண்ணிக்கையை சரிபார்த்து, அதற்கேற்ப நோட்டுக்கள் மற்றும் புத்தகங்களை ஆசிரியர்கள் கையில் ஒப்படைத்தனர். நெல்லை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் பேட்டை காமராஜர் பள்ளியிலே இலவச சீருடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. வள்ளியூர் மற்றும் சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கான இலவச சீருடைகள் அந்தந்த கல்வி மாவட்ட அளவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நோட்டு புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்றும், நாளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மாவட்டம் முழுமைக்கும் ஒரே மையத்தில் நோட்டு புத்தகங்கள் அளிக்கப்படுவதால் ஆசிரியர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி அவற்றை பெற்றுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளிகளுக்கே கொண்டு சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கிட வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் நோட்டு புத்தகங்களை பெறுவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் இருந்து ஆசிரியர்கள் குழுவாக வரவழைக்கப்படும் நிலையில், அவற்றை பெறவும் போராட வேண்டியதுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள புத்தகங்களையாவது எளிதில் பெற்றுவிடலாம். ஆனால் பிளஸ்1, பிளஸ்2 பாட புத்தகங்களை பாடவாரியாக பெறும்போது, ஆசிரியர்கள் ஒவ்வொரு அறையாக சென்று சிரமப்பட வேண்டியுள்ளது.

இதுதவிர நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், பேட்டை மையத்திற்கு வந்து நோட்டு புத்தகங்களை பெற்று கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். இதற்காக மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள திசையன்விளை குட்டம் தொடங்கி, பணகுடி, காவல் கிணறு பள்ளிகள் கூட வாடகை வாகனங்களை அமர்த்திக் கொண்டு நெல்லைக்கு வரவேண்டியதுள்ளது. அதற்கான வாடகை கட்டணம் ஆசிரியர்கள் முதலில் கையில் இருந்து செலுத்த வேண்டும்.

பின்னர் அதை கல்வி அலுவலகத்தில் பெற விண்ணப்பிக்கும்போது, பாதி தொகையே கிடைக்கிறது. மேலும் பள்ளி சீருடைகளை பெற்றிட மற்றொரு நாள் அந்தந்த கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டியுள்ளது. எனவே பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்களை அந்தந்த கல்வி மாவட்ட அளவில் வினியோகம் செய்தால் வசதியாக இருக்கும்’’ என்றனர்.

The post நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Nellai ,
× RELATED கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண்கலெக்டர் அலுவலகம் முன் 3 குழந்தைகளுடன் தர்ணா