×

சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின

*பொதுமக்கள், அதிகாரிகள் அதிர்ச்சி

சேலம் : சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கியதால் பொதுமக்களும், மீன்வளத்துறை அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேலத்தை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

சமீபகாலமாக சேலம் மாநகர பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுகளும், அப்பகுதியில் சேகரமாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளும் ஏரியில் தேங்கியதால், மிகவும் மாசடைந்தது. இதனால், போடிநாயக்கன்பட்டி ஏரியை தூர்வாரி அழகுபடுத்தும் பணியை மேற்கொள்ள சேலம் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து, ஏரியை அழகுப்படுத்தி, கரையோரம் பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளனர்.

போடிநாயக்கன்பட்டி ஏரி சீரமைப்பு பணியை விரைவில் தொடங்க இருப்பதால், தற்போது அந்த ஏரியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதுடன், குப்பை உள்ளிட்ட கழிவுகளையும் அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதனால், ஏரியில் தேங்கியுள்ள நீரில் மீன்களை பிடிக்கும் பணியில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் நேற்று, ஏரியில் வலை வீசியபோது அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அதிகளவு சிக்கியது. 5 கிலோ முதல் 20 கிலோ எடை வரையில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் போடிநாயக்கன்பட்டி ஏரிக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், ஏரியில் தண்ணீர் வற்றிய சகதி பகுதியில் அதிகளவு ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் இருப்பது தெரியவந்தது. இந்த தடை செய்யப்பட்ட மீன்களை யாரேனும் கொண்டு வந்து, ஏரியில் விட்டு வளர்த்தார்களா? அல்லது வேறு வகையில் எப்படி இந்த மீன்கள் ஏரிக்கு வந்தது என்பது பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஏரி நீரை முழுமையாக வற்ற வைத்தால் தான், தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை முற்றிலும் அகற்ற முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின appeared first on Dinakaran.

Tags : Salem Lake ,Salem ,Salem Bodhinayakanpatti lake ,Bodhinayakanpatti ,Dinakaran ,
× RELATED கைதிகளுக்கு கஞ்சா கடத்திய சமையல்காரர் ‘டிஸ்மிஸ்’