×

கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் அடைந்த தோல்வி தொடரும் : அமித்ஷா விமர்சனத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பதிலடி!!

பத்ரக்: வரும் ஜூன் 10ம் தேதி நவீன் பட்நாயக் ஒடிசாவின் முன்னாள் முதல்வர் ஆகி இருப்பார் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு பதில் அளித்துள்ள நவீன் பட்நாயக், கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியே ஒடிசாவிலும் தொடரும் என்றார். ஒடிசாவில் பத்ரக் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சந்த்பாலியில் நேற்று நடந்த தேர்தல் பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளில் 17ல் பாஜ வெற்றி பெறும். இதே போல 147 சட்டசபை தொகுதிகளில் 75ல் நாங்கள் வெற்றி அடைவோம். எனவே ஜூன் 10ம் தேதி வந்துபாருங்கள், நவீன் பட்நாயக் இங்கு முதல்வராக இருக்க மாட்டார். அவர் முன்னாள் முதல்வராகி இருப்பார். ஒடிசாவில் அடுத்த முதல்வர் ஒடியாவில் சரளமாகப் பேசுவதையும், மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புரிந்து கொள்பவராக இருப்பதையும் பாஜ உறுதி செய்யும்.

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி (பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த வி.கே.பாண்டியனை குறிப்பிட்டார்) திரைமறைவில் இருந்து ஆட்சி நடத்த வேண்டுமா? அதை நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது அதிகாரிக்கு பதிலாக மக்கள் சேவகன் ஆட்சி அமைய விரும்புகிறீர்களா? மக்கள் சேவகன் வேண்டுமென்றால் பாஜவுக்கு வாக்களியுங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பார்த்து பயப்படுவதால் அதைப் பற்றி காங்கிரஸ் வாய் திறப்பதில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நமக்கே சொந்தம். அதை நாங்கள் மீட்டெடுப்போம் என்றார். இந்த நிலையில் அமித்ஷாவின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள நவீன் பட்நாயக், கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியே ஒடிசாவிலும் தொடரும் என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என்று பாஜகவினர் கூறினர். ஆனால் தோற்றனர். தெலங்கானா, இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் அதையே தான் கூறினார்கள். ஆனால், அங்கும் தோல்வியை தழுவினார்கள்.ஒடிசாவிலும் அதே தான் தொடரும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒடிசாவுக்கு வருகை தரும் முதலமைச்சர்கள், ஒன்றிய அமைச்சர்களாக உள்ள பாஜக மூத்தத் தலைவர்கள், மோசமான வார்த்தைகளையும் பொய் குற்றச்சாட்டுகளையும் வைக்காமல் இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நவீன் பட்நாயக் பேசும் போது, அவரது கைகள் நடுங்கியதை வி.கே.பாண்டியன் மறைத்தது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அசாம் மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வா, நவீன் பட்நாயக் அவர்களின் கைகளை வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்துவது மாநிலத்தின் அதிகாரத்தை கைப்பற்றவே என குறிப்பிட்டுள்ளார். ஒடிசா முதல்வரின் கை அசைவுகளை கூட வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்ட அவர், ஒடிசாவின் எதிர்காலத்தை ஓய்வுபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி கட்டுப்படுத்துவதை கற்பனை செய்யவும் முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

The post கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் அடைந்த தோல்வி தொடரும் : அமித்ஷா விமர்சனத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பதிலடி!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Telangana ,Himachal ,Odisha ,Chief Minister ,Naveen Patnaik ,Amit Shah ,Bhatrak ,Union Home Minister ,BJP ,Himachal Pradesh ,
× RELATED தென் மாநிலங்களில் தொடர் கைவரிசை;...