×

ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்… வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்: பாஜவினருக்கு உதயகுமார் பளார்…பளார்…

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜவினர் அவர்களின் தலைவர்கள், கொள்கையை பற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜெயலலிதாவின் சமூகநீதி கொள்கை, பெண்ணுரிமை கொள்கை, மாணவ சமுதாயத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு உள்நோக்கத்துடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பாஜவினர் சொல்வதில் எந்த தாக்கமும் தமிழகத்தில் ஏற்படாது.

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளை அவர்கள் சொல்லித்தான் தமிழக மக்களுக்கு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் தங்களை தமிழகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதற்கும், முகவரி தேடி கொள்வதற்கும் ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது. அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஜெயலலிதாவுக்கு முகவரி தேவையில்லை. அவர் அனைவருக்கும் சொந்தமானவர்.

உங்களுக்கு தைரியம் இருந்தால், வீரம் இருந்தால் உங்கள் தலைவர்களை கூறி உங்கள் செல்வாக்கை சொல்லி, கட்சி கொள்கைகளை சொல்லி, முன்னாள், இன்னாள் தலைவர்களை கூறி தமிழ்நாட்டு மக்களுடைய நம்பிக்கையை பெற முயற்சி எடுங்கள். மக்கள் எந்த காலத்திலும் உங்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள். உங்கள் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாது. மக்களிடம் வரவேற்பு கிடையாது.

மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதால்தான், தற்போது ஜெயலலிதாவை புகழ்வது போல் வஞ்சப்புகழ்ச்சியாக உங்களை அடையாளம் காட்டி கொள்கிறீர்கள். இதனை மக்கள், அதிமுக தொண்டர்கள் ஏன் பாஜ தொண்டர்கள் கூட ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா அரசியல் செய்து கொண்டு இருந்தபோது அண்ணாமலை பள்ளிக்கூட மாணவராக இருந்தார். அரசியல் அனுபவம் இன்றி அவர் பேசுகிறார். வருகிற மக்களவை தேர்தலில் அவர்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களை மக்கள் அளிப்பார்கள். அப்போது நேரத்தையும், காலத்தையும் வீணடித்து விட்டோமே என அவர் உணர்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர்
ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மணலூர், படமாத்தூர், திருமாஞ்சோலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், ‘‘அண்ணாமலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மதங்களையும் தன் வாழ்நாள் முழுவதும் மதித்து மறைந்த ஜெயலலிதாவை பற்றி அவதூறு பரப்பும் அண்ணாமலையை கண்டிக்கிறோம். அரைவேக்காடு அண்ணாமலையே மன்னிப்புக் கேள். இவண், சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவர் அணி பொருளாளர் மணிமாறன்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்… வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்: பாஜவினருக்கு உதயகுமார் பளார்…பளார்… appeared first on Dinakaran.

Tags : Jayalalitha… ,Udayakumar ,BJP ,Palar… ,Tirumangalam ,Former ,AIADMK ,minister ,T. Gunnathur ,Tirumangalam, Madurai district ,Jayalalithaa ,Udayakumar Palar ,Palar ,
× RELATED சொல்லிட்டாங்க…