×

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு கேரள அரசாணை நகலை எரித்து விவசாயிகள் கண்டன போராட்டம்

* வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை, மறியல், போலீசுடன் தள்ளுமுள்ளு; மதுரையில் பரபரப்பு

மதுரை: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசை கண்டித்து, மதுரையில் நடந்த கண்டன போராட்டத்தில், கேரள அரசின் அரசாணை நகலை எரித்து விவசாயிகள் எதிர்ப்பை தெரிவித்தனர்.. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக, அனுமதி கோரிய கேரள அரசுக்கு, ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு, 2019ல் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசு ஏற்கனவே வழங்கிய ஒப்புதலை, உடனடியாக பரிசீலனை செய்ய கேரள அரசு தரப்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து, மதுரை தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகம் முன்பு விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தல்லாகுளம் தபால் அலுவலகத்திலிருந்து வருமான வரித்துறை அலுவலகம் வரை, விவசாய சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டனர். பிஎஸ்என்எல் அலுவலக நுழைவாயில் வரை சென்ற அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு வெளியிட்டுள்ள அரசாணை நகலை எரித்தனர்.

போலீசார் தடுக்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.தொடர்ந்து நடந்த, ஒப்பாரி போராட்டத்தில் மன்னார்குடி காவிரி பாசன விவசாய ஒன்றிய செயலாளர் பஞ்சநாதன் சடலம் போல் நடித்தார். விவசாயிகள் ஒன்றிணைந்து அவரை சுற்றி நின்று பெரியாறு அணையை காப்பாற்றக் கோரியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி அவரை தூக்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

* கார்த்திகை தீபம் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை, கடன் தள்ளுபடி, கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதந்தோறும் தண்ணீர் திறக்க நடவடிக்கை போன்ற பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி போராடி வருகின்றனர். நேற்று காலை 10.30 மணியளவில் 273 அடி உயர மலைக்கோட்டை கோயில் உச்சியில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்றும் டவரில் ஏறி 2 விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அய்யாக்கண்ணு தலைமையிலான 7 விவசாயிகள் படிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு கேரள அரசாணை நகலை எரித்து விவசாயிகள் கண்டன போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kerala government ,Mulla Periyar ,Income Tax Department ,Madura ,Madurai ,Kandana ,Kerala ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட...