×

சரக்கு வாகனம் கவிழ்ந்து 4 பெண்கள் படுகாயம்

 

அரூர், மே 29: கம்பைநல்லூர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் படுகாயமடைந்தனர். 15க்கும் மேற்பட்டோர் சிறு காயத்துடன் தப்பினர். கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். நேற்று வழக்கம்போல் குரங்கேரியிலுள்ள குளத்தை தூர்வார 23 பெண்கள் உட்பட 24 பேர் மினி சரக்கு வாகனத்தில் சென்றனர். கெலவள்ளியை சேர்ந்த பூவரசன் (23) என்பவர் வாகனத்தை ஓட்டினார். அரூர்-கம்பைநல்லுார் சாலையில் பூமிசமுத்திரம் அருகே அதிவேகமாக சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

இதில் வாகனத்தில் பயணம் செய்த ராமலிங்கம் நகரை சேர்ந்த தமிழரசி (47), பூங்கொடி (57), கெலவள்ளிபுதூரை சேர்ந்த பாஞ்சாலை (58), உஷா (40) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 15க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சரக்கு வாகனம் கவிழ்ந்து 4 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Campinallur ,Kelavalli panchayat ,Dinakaran ,
× RELATED ₹25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை