×

கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளையுடன் நிறைவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கி, 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு கடந்த நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.

தரவரிசைப் பட்டியலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், தேசிய மாணவர் படை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளில் நாளை (வியாழக்கிழமை) வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. கல்லூரிகளில் விண்ணப்பித்த சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளை 3 நாட்களுக்குள் கலந்தாய்வுக்கு அழைத்து இடங்களை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கல்லூரிகள் அவர்களை கலந்தாய்வுக்கு அழைத்து இடங்களை நிரப்பி வருகின்றன. பொருளாதார படிப்பில் ஆர்வம் சென்னை மாநிலக் கல்லூரியை பொருத்தவரையில் பொருளாதார படிப்பிற்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: கடந்த ஆண்டை விட 14 ஆயிரம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

வழக்கமாக கணிதப் பிரிவிற்கு விண்ணப்பங்கள் குறைவாக இருக்கும் என பிற கல்லூரியில் கூறுவர். ஆனால் மாநிலக் கல்லூரியை பொருத்தவரை கணித பாடத்திற்கு கடந்த ஆண்டை விட 500 விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பொருளாதார பாடப் பிரிவுக்கு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. புதுமைப்பெண் திட்டம் வந்த பின்னர் பெண்களின் விண்ணப்ப பதிவு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளையுடன் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Arts, Science College ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...