×

டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரகால வழியில் பயணிகள் வெளியேற்றம்

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்திலிருந்து வாரணாசிக்கு புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 176 பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது விமானி ஒருவர் விமானத்தின் கழிவறைக்கு சென்ற போது அங்கு துண்டு பேப்பர் ஒன்றில், ‘வெடிகுண்டு @5.30’ என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு, அவசரகால வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவசரகால சறுக்கு பாதை வழியாக விமானி விமானத்தில் இருந்து சறுக்கி வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தை பரிசோதித்ததில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து காலை 11.10 மணி அளவில் விமானம் வாரணாசிக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் சில மணி நேரம் பீதி நிலவியது.

 

The post டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரகால வழியில் பயணிகள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Delhi Airport ,Varanasi ,New Delhi ,IndiGo ,Indira Gandhi International Airport ,Delhi ,Uttar Pradesh ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...