×

ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ கொட்டியது கொச்சியில் மேக வெடிப்பு: கேரளாவில் கன மழைக்கு ஒரே நாளில் 5 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. கொச்சியில் மேக வெடிப்பு போல் ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ மழை கொட்டியது. கனமழைக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகினர். கேரளாவில் கடந்த சில வாரங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மழையின் தீவிரம் குறைந்திருந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம் கொல்லம், கோட்டயம் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. எர்ணாகுளத்தில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கொச்சியில் ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ மழை மேக வெடிப்பு போல் கொட்டித் தீர்த்ததால் நகரில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவான இன்போ பார்க்கில் வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர்.
கனமழையால் ஒரே நாளில் 5 பேர் பலியாகினர். திருவனந்தபுரம் அருகே முதலப்பொழியில் கடலில் படகு மூழ்கியதில் ஆபிரகாம் என்ற மீனவர் உயிரிழந்தார். காசர்கோடு, எர்ணாகுளத்தில் தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஆலப்புழா அருகே உள்ள மாவேலிக்கரையில் வீட்டு முன் நின்று கொண்டிருந்த அரவிந்த் (28) என்பவரின் மீது தென்னை மரம் விழுந்ததில் உயிரிழந்தார். திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவ ன் உடல் நேற்று மீட்கப்பட்டது.

 

The post ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ கொட்டியது கொச்சியில் மேக வெடிப்பு: கேரளாவில் கன மழைக்கு ஒரே நாளில் 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kochi ,Kerala ,Thiruvananthapuram ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!