×

அக்னிபாதை திட்டத்தை திணித்து நாட்டின் பாதுகாப்போடு விளையாடும் மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எங்களிடம் 3 கேள்விகள் உள்ளன. இதற்கு இறுதிகட்ட தேர்தலில் பாஜவுக்கு பொதுமக்கள் தகுந்த பதிலை தருவார்கள். முதல் கேள்வி: ‘ராணுவத்தில் ஆண்டுக்கு 75,000 புதிய வீரர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அக்னி பாதை திட்டம் மூலம் 46,000 ஆக குறைந்தது உண்மையா இல்லையா? 2வது கேள்வி: அக்னி வீரர்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும், மேம்படுத்த வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது உண்மையா இல்லையா? 3வது கேள்வி: அக்னிபாதை திட்டத்தால் நடப்பு பத்தாண்டு இறுதிக்குள் ஆண்டுக்காண்டு புதிய வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து ராணுவ விவகாரத்துறையும் ராணுவமும் கவலை கொண்டிருப்பது உண்மையா இல்லையா? இவ்வாறு, அக்னிபாதை திட்டத்தை திணிப்பதன் மூலம் மோடி அரசு நாட்டின் தேச பாதுகாப்போடு விளையாடி உள்ளது.

மோடி அரசு அக்னிபாதை திட்டத்தின் மூலம் தேசபக்தி கொண்ட இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்வோம் என உறுதி அளிக்கிறோம். இவ்வாறு கார்கே கூறி உள்ளார். சண்டிகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, ‘‘பாஜவின் 400 சீட் இலக்கு என்பது முட்டாள்தனமானது. அவர்களால் இம்முறை 200 சீட்களைக் கூட தாண்ட முடியாது. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானாவில் பாஜ இல்லவே இல்லை. கர்நாடகாவில் மிக பலவீனமாக உள்ளது. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசாவிலும் அவர்கள் டம்மி தான். அப்படியிருக்கையில் எப்படி 400 சீட் கிடைக்கும்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்

 

The post அக்னிபாதை திட்டத்தை திணித்து நாட்டின் பாதுகாப்போடு விளையாடும் மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi ,New Delhi ,president ,Mallikarjuna Kharge ,BJP ,Modi government ,
× RELATED மாணவர்களின் எதிர்காலத்துக்கு மோடி...