×

சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி: பிளக்ஸ் போர்டால் பரபரப்பு

பேட்டை: நெல்லை பேட்டையில் செல்ல பிராணியான சண்டை சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் போர்டு அமைத்தது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலும் சிலர் தங்கள் வீடுகளில் செல்ல பிராணிகளை ஆசையோடு வளர்ப்பது வழக்கம். அவற்றுக்கு பெயர் வைத்து கொஞ்சி மகிழ்வதுடன் அதனுடன் ஒரு பாச பிணைப்பினை ஏற்படுத்திக்கொண்டு மன நிறைவுடன் பொழுதுபோக்குவர். இந்த செல்லப்பிராணிகள், வளர்க்கும் உரிமையாளர்கள் குரலை கேட்டவுடன் மிகுந்த உற்சாகத்துடன் அவர்களை வரவேற்பது வியப்பினை ஏற்படுத்தும். செல்லப்பிராணிகளுடன் அதன் பிறப்பிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வளர்ச்சி பருவத்தினை படம் எடுத்து நினைவாக வைத்துக்கொள்வதும், கொஞ்சி மகிழ்வதை நினைவாக செல்பி எடுத்து வைத்துக்கொள்வதும் அதன் உரிமையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது வழக்கம்.

இதேபோல் நெல்லை அருகே பேட்டை செக்கடி திருத்து பகுதியைச்சேர்ந்த வாலிபர், சண்டை சேவல் ஒன்றை 2019ம் ஆண்டு முதல் வளர்த்து வந்துள்ளார். வயது மூப்பு காரணமாக அந்த சேவல் நேற்று இறந்தது. தனது துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த வாலிபர், பேட்டை பஜாரில் தான் வளர்த்து வந்த சேவலின் பிறப்பு மற்றும் இறப்பு தேதியிட்டு அதனை படத்துடன் வருந்துகிறோம் என கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் போர்டு அமைத்திருந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அனுமதியின்றி வைத்ததாக கூறி நேற்று இரவு அந்த பிளக்ஸ் போர்டை அப்புறப்படுத்தினர்.

The post சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி: பிளக்ஸ் போர்டால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Plax Board ,Pettah ,Nella Pettah ,Conchi ,Plague Board ,
× RELATED பேட்டை நரிக்குறவர் காலனி காளியம்மன்...