×

ஸ்ரீபெரும்புதூர் அருகே 9 பசு மாடுகள் மர்ம சாவு: விஷம் வைக்கப்பட்டதா? விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் 9 பசு மாடுகள் இறந்த சம்பவத்தில், விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாம்பாக்கம், பால்நெல்லூர், சேலையனூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பசு மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல சேலையனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்களது பசுமாடுகளை மேய்ச்சலுக்காக மாம்பாக்கம் சிப்காட் அருகே விட்டு சென்றுள்ளனர். மாலை நீண்ட நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பாததால் அதன் உரிமையாளர்கள் தேடிப் பார்த்துள்ளனர்.

அப்போது, சிப்காட் பகுதியில் 9 பசுமாடுகள் வாயில் நுரைதள்ளியவாறு இறந்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர்கள், இதுகுறித்து சிப்காட் அதிகாரிகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கும் தகவல் தெரி வித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், சாலையில் இறந்து கிடந்த பசுமாடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் விஷம் வைத்து மாடுகள் கொல்லப்பட்டதா? அல்லது வேறுஏதாவது தின்று இறந்ததா? என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே 9 பசு மாடுகள் மர்ம சாவு: விஷம் வைக்கப்பட்டதா? விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Mambakkam ,Palnellur ,Chelaiyanur ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் 9 பசு மாடுகள் உயிரிழப்பு