×
Saravana Stores

கணவர் இறந்த நிலையில் ஆறாவதாக பிறந்த பச்சிளங் குழந்தை ரூ.5,000-க்கு விற்பனை: திரிபுராவில் வறுமையின் கொடுமை

அகர்தலா: திரிபுராவில் கணவர் இறந்த நிலையில் 6வதாக பெற்ற பச்சிளங் குழந்தையை ரூ. 5,000க்கு விற்றதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அந்த குழந்தை மீட்கப்பட்டது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் ஹெஜாமாரா பகுதியை சேர்ந்த மர்மரி திரிபுரா என்ற பெண்ணின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காலமானார். ஏற்கனவே 5 குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண், கர்ப்பிணியாகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்தப் பெண்ணுக்கு ஆறாவது குழந்தை பிறந்தது. வறுமையின் காரணமாக பச்சிளங் குழந்தையை பாதுகாக்க முடியாமல் தவித்த அந்தப் பெண், ஹெஜாமாரா பகுதியைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியருக்குத், தனது பச்சிளங் குழந்தையை விருப்பத்துடன் தானம் செய்துள்ளார்.

ஆனால், ஐந்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, அந்தப் பெண் தனது குழந்தையை விற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் செய்தி திரிபுராவில் வேகமாக பரவியது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி, பச்சிளங் குழந்தையை மீட்டனர். பின்னர் தாய் மற்றும் பிறந்த குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், குழந்தையில்லாத தம்பதியினர் அந்த குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டு வாங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், திரிபுரா எதிர்க்கட்சித் தலைவர் ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில், ‘வறுமையில் வாடும் தாய், தனது குழந்தையை விற்க வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மாநில அரசின் நிர்வாக சீர்கேட்டால் இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

The post கணவர் இறந்த நிலையில் ஆறாவதாக பிறந்த பச்சிளங் குழந்தை ரூ.5,000-க்கு விற்பனை: திரிபுராவில் வறுமையின் கொடுமை appeared first on Dinakaran.

Tags : Tripura ,Marmari ,Hejamara ,northeastern state ,
× RELATED ரஞ்சி ரவுண்டப்…