×

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு: கணக்கில் வராத ரூ.1.57 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவைகளின் கட்டுப்பாட்டில் 306 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் வருடாந்திர வரவு-செலவு கணக்குகளை, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்வர். இதன்படி, இந்தாண்டு வரவு-செலவு கணக்குகளை உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக தணிக்கை செய்து வந்தனர்.

இதில், 14 பிடிஓ,க்கள், 306 ஊராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஊராட்சிக்கும் தனிப்பதிவேடு மொத்தம் 306 பதிவேடுகள் தணிக்கை செய்யப்பட்டன. இந்நிலையில், வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்ய, உள்ளாட்சி நிதி தணிக்கை பிரிவு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை 6 மணி அளவில், உள்ளாட்சி நிதி உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த போலீசார், சில அதிகாரிகளின் மேஜை, குப்பைத் தொட்டி, பீரோக்களில் மறைத்து வைத்திருந்த, கணக்கில் வராத ரூபாய்களை கைப்பற்றினர். மொத்தம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 270ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தனியாக அழைத்துச் சென்ற போலீசார் அந்த பணத்திற்கு முறையான கணக்கு இருக்கிறதா? என விசாரித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இரவு 12 மணிக்கு நிறைவடைந்தது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

The post திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு: கணக்கில் வராத ரூ.1.57 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dindigul Collector ,Anti-Corruption Bureau ,Dindigul ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் வட்டாச்சியர் சுந்தரராஜன்...