×

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெறுகிறது. இருப்பினும் வட மாவட்டங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் அடுக்கில் உருவான வளி மண்டல காற்று சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வந்ததால் கோடை மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கோடை மழை இந்த முறை வெளுத்து வாங்கியது என்றே சொல்ல வேண்டும். ஆனால், வட தமிழகத்தில் லேசான மழை இடையிடையே பெய்தாலும், வெயிலின்தாக்கம் குறையவில்லை.

சராசரியாக அனேக இடங்களில் 100 டிகிரி வெயில் நிலவினாலும், சில இடங்களில் 102 டிகிரி முதல் 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இருப்பினும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பின்றி போய்விட்டது வருத்தம்தான். கத்திரி வெயில் இன்றுடன் முடிய உள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்ததுடன், வெப்பநிலையும் குறையத் தொடங்கியது. அதே நேரத்தில் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெயில் மற்றும் வெப்ப நிலை குறையவில்லை. இந்நிலையில் சென்னையில் நேற்று 106 டிகிரி பதிவாகியிருக்கிறது.

அதாவது தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக, 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 3-4 தினங்களில் துவங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Center ,Chennai ,Kathri Weil ,Chennai Meteorological Centre ,South Indian ,
× RELATED நெல்லை, தூத்துக்குடி, தென்காசி...