×

தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெறுகிறது: ஆனாலும் வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெறுகிறது. இருப்பினும் வட மாவட்டங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொாடங்குவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அது 28ம் தேதி வரை நீடிக்கும் என்ற நிலையில் இன்றுடன் இந்த கத்திரி வெயில் தமிழ்நாட்டில் இருந்து விடை பெறுகிறது.

பொதுவாக இந்த கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் கடுமை அதிகமாகவே இருப்பது வழக்கம். கடந்த ஆண்டில் 110 டிகிரி வரை இந்த காலகட்டத்தில்வெயில் பதிவானது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கிய பிறகு 28ம் தேதி வரையில் வெயில் சுட்டெரிக்கும் என்ற அச்சம் இருந்தது. அதற்கேற்ப அதிகபட்சமாக வெயில் 111 டிகிரிவரை உச்சமடைந்து சுட்டெரித்தது. அதன்பிறகு இந்த வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோடை மழை குறுக்கிட்டது. தென்னிந்திய பகுதிகளின் மேல் அடுக்கில் உருவான வளி மண்டல காற்று சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வந்ததால் கோடை மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கோடை மழை இந்த முறை வெளுத்து வாங்கியது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், வட தமிழகத்தில் லேசான மழை இடையிடையே பெய்தாலும், வெயிலின்தாக்கம் குறையவில்லை. சராசரியாக அனேக இடங்களில் 100 டிகிரி வெயில் நிலவினாலும், சில இடங்களில் 102 டிகிரி முதல் 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இருப்பினும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பின்றி போய்விட்டது வருத்தம்தான். கத்திரி வெயில் இன்றுடன் முடிய உள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்ததுடன், வெப்பநிலையும் குறையத் தொடங்கியது. அதே நேரத்தில் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெயில் மற்றும் வெப்ப நிலை குறையவில்லை.

இந்நிலையில் சென்னையில் நேற்று 106 டிகிரி பதிவாகியிருக்கிறது.. அதாவது தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக, 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் சென்னைவாசிகள் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. வேலூர் 104 டிகிரி, தஞ்சாவூர் 102 டிகிரி, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, கடலூர், ஈரோடு, மதுரை விமான நிலையம் மற்றும் புதுச்சேரியில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெப்பநிலை நிலவியது. இந்நிலையில்தான் இன்றுடன் அக்னி நட்சத்திரம் விடை பெறுகிறது. இருப்பினும், வட மாவட்டங்களின் சமவெளிப்பகுதிகளில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ்வரையில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்றிலிருந்து இந்த வெப்பநிலை படிப்படியாக உயரும் வாய்ப்புள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வட மாவட்டத்தில் மீண்டும் வெப்பம் மற்றும் வெயிலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று அலர்ட் செய்யப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் எல்நினோ வெப்பநிலை மாறினால் இந்தியப் பெருங்கடல் மட்டத்தில் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அப்படி குறைந்தால் தமிழ்நாட்டில் வெப்பநிலை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. இல்லை என்றால் தமிழகத்தின் வடக்கு கடலோரம் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், ஜூன் வரையிலும் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

The post தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெறுகிறது: ஆனாலும் வெப்பம் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Tags : Agni Nakshatra ,Tamil Nadu ,Chennai ,Kathri Veil ,Chennai Meteorological Department ,Nakshatra ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் ரயில்வே கீழ்பாலத்தில்...