×

மண்டபம் கடற்கரை பூங்காவில் பாம்பன் சாலை பால அழகை காண இடையூறு ஏற்படுத்தும் கருவேல மரங்கள்

*சுற்றுலா பயணிகள் அகற்ற கோரிக்கை

மண்டபம் : மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்காவில் இருந்து பாம்பன் சாலை பாலத்தின் தோற்றத்தையும், பாம்பன் தீவு கடலின் அழகை ரசிப்பதற்கும் இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கும், ஏற்கனவே உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில் மண்டபம் ஒன்றிய பகுதிக்குட்பட்ட சாத்தக்கோன்வலசை ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அரியமான் பீச் பகுதி, பாம்பன் ஊராட்சியில் பாம்பன் குந்துகால் பகுதி, ராமேஸ்வரம் நகராட்சியில் தனுஷ்கோடி பகுதியை மேம்படுத்துவதற்கும் மற்றும் பிரப்பன்வலசை ஊராட்சி வடக்கு கடலோர பகுதியில் சுற்றுலா தலம் அமைப்பதற்கும் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம்- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் கடல் சாலை பாலத்தின் அருகே தென்கடலோர பகுதியில் மண்டபம் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா நீண்ட தொலைதூரத்தில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் இருந்து குருசடை தீவு, பூமரிச்சான் தீவு, பாம்பன் சாலை பாலத்தின் தோற்றம், பாம்பன் தீவு கடலின் அழகு உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் இந்த பூங்கா அமைதி காக்கும் பகுதியாக அமைந்திருப்பதால் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் பக்தர்களும், தனுஷ்கோடியை பார்வையிட்டு திரும்பும் சுற்றுலா பயணிகளும் மற்றும் பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தினசரி வந்து பொழுதுபோக்கி செல்கின்றனர்.எனவே பூங்காவில் இருந்து பாம்பன் சாலை பாலத்தின் அழகை ரசிக்கும் வகையில் இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

மண்டபம் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் தீவுக்கு இப்பூங்கா வழியாக தான் மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாம்பன் சாலை பாலம் நுழைவு பகுதி அருகாமையில் மின் கம்பங்கள் அமைத்து அங்கிருந்து கேபிள் மூலம் பாம்பன் சாலை பாலம் வழியாக ராமேஸ்வரம் தீவில் வசிக்கக்கூடிய ஏறத்தாழ 60 ஆயிரம் மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மின்சார கேபிள்கள் வரும் பகுதியில் கருவேல மரங்கள் மற்றும் செடி, புதர்கள் அதிகமாக உள்ளது.

இதனால் மின்கசிவுகள் ஏற்பட்டாலும் அதை பழுது பார்க்க மின்சார வாரிய ஊழியர்களுக்கு பெரும் இடையூறாக இந்த மரம், செடிகள், புதர்கள் உள்ளது. மேலும் கருவேல மரங்கள் நிறைந்த இந்த பகுதி பார்ப்பதற்கு அச்சமாக இருப்பதால் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் செல்ல மாட்டார்கள். அடர்ந்த மரங்களின் நிழல் மது பிரியர்கள் மதுபானத்தை அருந்துவதற்கு வசதியாக அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே இவற்றை அகற்றுவதற்கு உடனே நடவடிக்கை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.

நடைபயிற்சி மேடை அமைக்கப்படுமா?

இப்பூங்கா ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் பாறைகள் நிறைந்த மணல் பரப்பில் அமைந்துள்ளது. இதனால் இந்த பூங்காவில் ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மற்றும் பூங்காவை சுற்றி வசித்து வரும் மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் உடற்பயிற்சி செய்யவும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நடைப்பயிற்சி செய்யவும் நடைமேடை அமைக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post மண்டபம் கடற்கரை பூங்காவில் பாம்பன் சாலை பால அழகை காண இடையூறு ஏற்படுத்தும் கருவேல மரங்கள் appeared first on Dinakaran.

Tags : Pampan road bridge ,Mandapam Beach Park ,Mandapam ,Pampan road ,Pampan island ,Mandapam Municipality beach park ,Dinakaran ,
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் பாதங்களை பதம்...