×

செய்யாறு மார்க்கெட் பகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்

செய்யாறு : செய்யாறு மார்கெட் பகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பெண்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.செய்யாறு நகரின் பிரதான சாலையான காந்தி சாலையில் மார்க்கெட் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் இருபுறமும் 450 மீட்டர் தொலைவிற்கு ரூ.4 கோடியே 95 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நடப்பாண்டு மார்ச் மாதம் முடிக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

அப்பணியின்போது கால்வாய் தோண்டப்பட்ட இடத்தில் இருந்த குடிநீர் இணைப்புகளை நெடுஞ்சாலைத் துறையின் ஒப்பந்ததாரர் முறையாக இணைக்காமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாலை அமைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மார்கெட் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நகராட்சி விநியோகிக்கும் குடிநீரானது கழிவு நீருடன் கலந்து அசுத்தமாகவும் துர்நாற்றத்துடனும் விநியோகிக்கப்பட்டது.

எனவே சுகாதாரமாக குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் காந்தி சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். நகராட்சி நிர்வாகத்திடம் கூறி சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்‌. இதனிடையே நகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி கொண்டு சாலையில் பள்ளம் வெட்டி குடிநீர் குழாய் பழுதை சரிசெய்யும் பணியை தொடங்கினர்.

The post செய்யாறு மார்க்கெட் பகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பெண்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Seiyaru market ,Seiyaru ,Gandhi road ,Dinakaran ,
× RELATED புண்ணியக்கோட்டீஸ்வரர் கோயில்...