×

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் ‘சிம்பிடியம்,பயர் ஸ்டார்’ ஆர்கிட் மலர்கள்

ஊட்டி : குன்னூரில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பூங்காவில் ‘சிம்பிடியம் மற்றும் பயர் ஸ்டார்’ வகை ஆர்கிட் மலர்கள் பூத்துள்ளன. இவை சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான ‘ஆர்கிட்’ மலர்கள் பூத்து காணப்படுகிறது. ‘ஆர்கிடேசி’ என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த பூக்கும் தாவரங்களான இவை, தாவர குடும்பங்களிலேயே இரண்டாவது மிகப்பெரிய பூக்கும் தாவர குடும்பமாக உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வடகிழக்கு இந்திய பகுதிகளிலும் இயற்கையாக காணப்படுகிறது. அதில், 763 பேரினங்களும்,28 ஆயிரம் சிற்றினங்களும் காணப்படுவதாக கூறப்படுகிறது. இம்மலர்கள் பூத்த பின்னர் பல நாட்கள் வாடாமல் இருக்கும்.ஆர்க்கிட் வனப்பகுதிகளில் காணப்படுவது மட்டுமின்றி, நாடுகாணி ஜீன்பூல் தாவரவியல் மையம், ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதி, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது மட்டுமின்றி ஆய்வுக்கு வரும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கும் உதவியாக உள்ளது.

இதனிடையே குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பாத்திகளில் பல்வேறு வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக பூங்காவில் வளர்க்கப்படும் ஆர்க்கிட் மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. இங்கு தொட்டியில் நடவு செய்யப்பட்டுள்ள சிம்பிடியம் மற்றும் பயர் ஸ்டார் வகை ஆர்கிட் மலர்கள் பூத்துள்ளன.

The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் ‘சிம்பிடியம்,பயர் ஸ்டார்’ ஆர்கிட் மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Coonoor Sims Park ,Sims Park ,Horticulture Department ,Coonoor ,Nilgiri district.… ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நாளை துவக்கம்