×

திருவண்ணாமலையில் 10 ஏக்கர் பரப்பளவில் ₹30.15 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பு

*விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

திருவண்ணாமலை : தென்னகத்தின் கயிலாயம் என போற்றப்படும் ஆன்மிக திருநகரம் திருவண்ணாமலை. நினைக்க முக்தித்தரும் இத்திருநகரில், அக்னி தலமான அமைந்திருக்கிறது அண்ணாமலையார் கோயில். மாநத்தோறும் நடைபெறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் உலக பிரசித்தி பெற்றதாகும். சமீப காலமாக, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்திருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். எனவே, எப்போதும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கும் நகராக மாறிவிட்டது.எனவே, திருவண்ணாமலைக்கான போக்குவரத்து தேவையும், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, விசாலமான பஸ் நிைலயமும் அவசியமாகியிருக்கிறது. திருவண்ணாமலையில் தற்போது அமைந்துள்ள பஸ் நிலையத்தில் போதுமான இடவசதியில்லை.

நெரிசலில் சிக்கித்தவித்து, பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்வதே பெரும் சவாலாக மாறிவிட்டது. பஸ் நிலையம் அமைந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.மேலும், தற்போதுள்ள பஸ் நிலையம் அமைந்துள்ள சாலை, கிரிவலப்பாதையாகவும் அமைந்திருக்கிறது.

எனவே, அந்த வழியாக கிரிவலம செல்லும் பக்தர்கள், வாகன நெரிசல்களுக்கு இடையே உயிரை பணயம் வைத்து நடந்து செல்வது மிகவும் வேதனைக்குரியதாகும். மேலும், பவுர்ணமி நாட்களில் தற்போதுள்ள பஸ் நிலையத்தை பயன்படுத்த முடிவதில்லை.

எனவே, திருவண்ணாமலையின் தேவை அறிந்து புதிய பஸ் நிலையம் அமைக்க அமைச்சர் எ.வ.வேலு முயற்சிகள் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, ரூ.30.15 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்,அதன்படி, டான்காப் நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலம் வகைமாற்றம் செய்யப்பட்டு, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், அந்த பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடம் உள்பட மொத்தம் 10 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி, தற்போது இறுதி கட்டத்தை நெருக்கியிருக்கிறது.

திருவண்ணாமலையில் தற்போது அமையும் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தில், ஒரே நேரத்தில் 54 பஸ்களை நிறுத்தும் வகையில் பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது. அதுதவிர, ஒரே நேரத்தில் 200 பஸ்களை நிறுத்துவதற்கு தனியாக இட வசதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், சைவ, அசைவ உணவகங்கள், கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், பயணிகள் ஓய்வு அறைகள், பொருட்கள் பாதுகாப்பிடம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஒய்வுஅறைகள், நேரக்கட்டுப்பாட்டு அலுவலகம், புறக்காவல் நிலையம், நவீன கழிப்பறை வசதிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் பார்க்கிங், பஸ் நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிவரும் ஆட்டோக்கள் வந்து செல்ல தனி வழி என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை நகர எல்லையில், அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதைக்கு அருகாமையில், ரயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில், பிரதான போக்கவரத்து வழித்தடமான சென்னை, திண்டிவனம், புதுச்சேரி சாலையில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு அம்சங்களாகும்.ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி, தற்போது 85 சதவீதம் முழுமையடைந்திருக்கிறது. நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் ஓரிரு மாதங்களில் முழுமையாக நிறைவடையும். எனவே, ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஸ் நிலையத்தில் குளியலறை வசதி

திருவண்ணாமலை புதிய பஸ் நிலையத்தில், கழிப்பறை வசதியுடன் கூடுதலாக நவீன குளியலறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பஸ் நிலையத்தில் இறங்கி குளித்துவிட்டு நேரடியாக கிரிவலம் செல்லவும், கோயிலுக்கு செல்லவும் இது பெரிதும் உதவியாக அமையும். மேலும், 10 ஏக்கர் பரப்பளவில், மிகவும் விசாலமான இடத்தில் பஸ் நிலையம் அமைவதால், பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற விழா காலங்களில், இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியும்.

தற்காலிக பஸ் நிலையங்களின் தேவை, இனிவரும் காலங்களில் குறைந்துவிடும். நகர எல்லைக்குள் வரை அனைத்து பஸ்களும் வந்து செல்ல முடியும் என்பதால், கிரிவல பக்தர்கள் தற்காலிக பஸ் நிலையங்களை தேடி அலையும் நிலையும் மாறும். புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில், ரயில் நிலையத்தையொட்டி புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைகிறது. அதோடு, நகர எல்லையிலும் அமைந்திருக்கிறது. அதனால், பொதுமக்களுக்கும், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post திருவண்ணாமலையில் 10 ஏக்கர் பரப்பளவில் ₹30.15 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Kailayam of the South ,Annamalaiyar ,Purnami Krivalam ,
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!