×

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு

சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தினமும் 700க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாக சுமார் 7 ஆயிரம் டன் அளவிலான காய்கறிகள் தருவிக்கப்பட்டு வியாபாரம் நடைபெறும். இதில், அத்தியாவசியத் தேவையான தக்காளி மட்டும் தினமும் 65 லாரிகளில் கொண்டு வரப்படுகிறது.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பூசணிக்காய், சுரைக்காய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.2-க்கு விற்ற சுரைக்காய் ரூ.20-க்கும் ரூ.8-க்கு விற்ற பூசணி ரூ.14-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வைகாசி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுவதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளதால் வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Chennai ,Koyambedu ,Market ,Andhra Pradesh ,Karnataka ,Kerala ,Maharashtra ,Tamil Nadu ,
× RELATED கோயம்பேடுக்கு வரத்து குறைவு...