×

கடலில் புதிய தூக்குப்பாலம் நிறுவும் பணிக்காக பாம்பன் கால்வாயை கப்பல், படகுகள் கடந்து செல்ல தடை

ராமேஸ்வரம் : பாம்பன் கடல் கால்வாயில் புதிய செங்குத்து தூக்குப்பாலத்தை நிறுவுவதற்காக கால்வாயில் தற்காலிக இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் கால்வாயை கப்பல்கள், பெரிய படகுகள் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.535 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தில் தற்போது செங்குத்து தூக்குப்பாலம் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடல் கால்வாயில் அமையும் முதல் செங்குத்து தூக்குப்பாலம் இதுவே ஆகும். இதற்கான பாகங்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்று தூக்குப்பாலம் ஆப்ரேட்டிங் கட்டிடம் வரை நகர்த்தப்பட்டு தூக்குப்பாலத்தின் தூண்களில் பொருத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் கடந்து செல்லும் தூக்குப்பாலம் கால்வாயில், தற்காலிக இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.இதற்காக கால்வாயில் ராட்சத இரும்பு மிதவையில் கிரேன் பொருத்தி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் காரணமாக தூக்குப்பால கால்வாயை கப்பல்கள், பெரிய படகுகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்பகுதி துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி மாநில துறைமுகங்களுக்கு செல்லும் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் புதிய தூக்குப்பாலம் பொருத்தும் பணிகள் நிறைவடையும் வரை கால்வாய் வழித்தடத்தை பயன்படுத்த முடியாது என ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

The post கடலில் புதிய தூக்குப்பாலம் நிறுவும் பணிக்காக பாம்பன் கால்வாயை கப்பல், படகுகள் கடந்து செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Pampan Canal ,Rameswaram ,Pampan Sea Canal ,Pampan Sea ,Dinakaran ,
× RELATED இரும்புத் தூண்கள் அமைக்கும் பணி...