×

சாமி சிலையை சேதப்படுத்திய பள்ளி பஸ் டிரைவர் கைது

 

சேலம், மே 28: ஆத்தூர் அருகே சாமி சிலையை சேதப்படுத்திய தனியார் பள்ளி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவாசல் வடகுமரையில் ஒரு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட சோனையன், சோனாயி கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவில் படையல் போடுவது தொடர்பாக கடந்த ஆண்டு, அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னை இன்றி சுமூகமாக போக செய்தனர். இந்நிலையில் அந்த சோனையன், சோனாயி கோயிலுக்கு நேற்று முன்தினம் மாலை, மற்றொரு தரப்பை சேர்ந்த தனியார் பள்ளி பஸ் டிரைவர் தங்கராஜ் (53) என்பவர் சென்றுள்ளார். அவர், கோயிலில் இருந்த சாமி சிலை, வேல் கம்பு ஆகியவற்றை பிடுங்கி போட்டு சேதப்படுத்தியுள்ளார்.

இதனை அறிந்த கோயில் நிர்வாக தரப்பினர் திரண்டு வந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார், தலைவாசல் இன்ஸ்பெக்டர் சாவித்ரி தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது கோயில் தரப்பில் பெரியசாமி, போலீசில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் டிஎஸ்பி சதீஷ்குமார் விசாரணை நடத்தி, கோயிலில் சாமி சிலையை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான தங்கராஜை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், வடகுமரை பகுதியில் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சாமி சிலையை சேதப்படுத்திய பள்ளி பஸ் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sami ,Salem ,Athur ,Talivasal Vadakumarai ,Sonaiyan ,Sonai ,
× RELATED ஆத்தூர் அருகே பள்ளி வேனின் டயர் வெடித்து விபத்தில் 13 சிறுவர்கள் காயம்