×

இனப்பெருக்க காலம் முடிந்தது சொந்த நாடுகளுக்கு திரும்பும் பறவைகள்: வேடந்தாங்கலில் எண்ணிக்கை குறைந்தது

 

சென்னை, மே 28: இனப்பெருக்க காலம் முடிந்து, குஞ்சுகள் பெரிதானதை தொடர்ந்து, வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பறவைகள் இனப்பெருக்கத்திற்கு பின்னர் தாயகம் திரும்பி செல்ல துவங்கியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் நீர் மட்டம் 16 அடி உயரம். தற்போது, சுமார் 4 அடிக்கு கீழ் தான் தண்ணீர் உள்ளது.

இந்நிலையில், வங்கதேசம், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றன. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரமான குளிர்காலத்தில் பறவைகள் வலசை வரத் துவங்குகின்றன. பின்னர், டிசம்பரம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் படிப்படியாக அதிகமாக தொடங்கும்.

பின்னர், இனப்பெருக்கம் முடிந்தது, மார்ச், ஏப்., மே மாதத்தின் கடைசி வராத்தில் தாய்நாட்டிற்கு திரும்பிவிடுவதால் பறவைகள் எண்ணிக்கை படிப்படியாக மிகவும் குறைந்து காணப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு கூழைக்கடா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், முக்குளிப்பான் மற்றும் புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை, குருட்டு கொக்கு, வக்கா, சாம்பல் நிற கொக்கு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்தன.

இதில், 40 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி இருந்து இரண்டு மடங்காக இனப்பெருக்கம் செய்து மீண்டும் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு செல்கின்றன. இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து தங்கள் தாய்நாட்டிற்கு பறவைகள் சென்ற வண்ணம் உள்ளன. தற்போது, 10 ஆயிரத்திற்கும் குறைவான பறவைகளே உள்ளன.

இதில் கனடா, சைபீரியா, மியான்மர் மற்றும் வங்கதேச மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, வர்ண நாரை, கூழைக்கடா உள்ளிட்ட சில பறவைகள் இனங்களே தற்போது உள்ளன. இதனிடையே, பள்ளி கோடை விடுமுறை காலம் என்பதால் பெற்றோருடன் பள்ளி குழந்தைகள், சுற்றுலா பயணிகள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து மிச்சமிருக்கும் பறவைகளை பார்த்து ரசித்து விட்டு செல்கின்றனர்.

The post இனப்பெருக்க காலம் முடிந்தது சொந்த நாடுகளுக்கு திரும்பும் பறவைகள்: வேடந்தாங்கலில் எண்ணிக்கை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Vedanthangal ,CHENNAI ,Vedantangal Sanctuary ,Vedantangal ,Madurandakam, Chengalpattu district ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...