×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு இலவச புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

 

காஞ்சிபுரம், மே 28: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்களை அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்வுகள் முடிவுற்று, கோடை விடுமுறையானது விடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 6ம்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ளன.  இதனால், வரும் 31ம்தேதிக்குள் பள்ளிகளுக்கு தேவையான 2023-24ம் கல்வி ஆண்டிற்கான பாட புத்தங்கள், நோட்டுகளை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு தேவையான விலையில்லா நோட்டு, புத்தகங்களை அனுப்பும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட 5 தாலுகா பகுதிகளுக்கு புத்தகங்களானது கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்ப தொடக்க கல்வித்துறையானது திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகரில் பள்ளி ஒன்றில் மொத்தமாக வைக்கப்பட்டுள்ள விலையில்லா புத்தகங்களை, அந்தந்த தாலுகா பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியானது முதற்கட்டமாக துவங்கியிருக்கிறது. அடுத்தபடியாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மேல்நிலைப்பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணியானது இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜூன் 6ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட கூடிய நிலையில், பள்ளி திறக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே புத்தகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்குள்ளாகவே அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு, புத்தகங்கள் சிரமமின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு இலவச புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,Tamil Nadu ,
× RELATED காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராய தடுப்பு...