×

அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும் குஜராத் அரசு மீது நம்பிக்கை இல்லை: விளையாட்டு அரங்க தீ விபத்து வழக்கில் நீதிபதிகள் கடும் கண்டனம்

அகமதாபாத்: ‘‘அப்பாவி உயிர்கள் பலியான பிறகு செயல்படும் குஜராத் அரசு இயந்திரம் மீது எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது’’ என விளையாட்டு அரங்க தீ விபத்து வழக்கில் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் விளையாட்டு அரங்கத்தில் கடந்த 25ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகினர். இந்த தீ விபத்து, மனித தவறால் ஏற்பட்ட பேரழிவு என குறிப்பிட்ட குஜராத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பிரேன் வைஷ்ணவ், தேவன் தேசாய் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜ்கோட் மாநகராட்சி சார்பில், விளையாட்டு அரங்கம் தேவையான அனுமதிகளை பெறாமல் இயங்கியதாகவும், தீயணைப்பு சான்றிதழ் பெறவில்லை எனவும் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். ‘‘இந்த அரங்கம் கடந்த 2021ல் அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டாக முழு அளவில் செயல்பட்டிருக்கிறது.

எந்த அனுமதியும் அவர்கள் பெறவில்லை என்றால் இவ்வளவு பெரிய கட்டிடம் இதுவரை உங்கள் கண்ணில் படவே இல்லையா? இல்லை, நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு இருந்தீர்களா? உண்மையை சொல்ல வேண்டுமானால், குஜராத் அரசு இயந்திரத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையே போய் விட்டது. இதுதொடர்பான விவகாரத்தில் கடந்த 4 ஆண்டாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல் வழங்கி அவகாசம் தந்துள்ளோம்.

கிட்டத்தட்ட இது 6வது சம்பவம். ஒவ்வொரு முறையும் அப்பாவி உயிர்கள் பலியான பிறகுதான் அரசு இயந்திரம் செயல்படத் தொடங்குவது எந்த வகையில் நியாயம்? எந்த அனுமதியும் பெறாத விளையாட்டு அரங்க திறப்பு விழாவுக்கு ராஜ்கோட் மாநகராட்சி ஆணையர் சென்றதாக மீடியாவில் செய்திகள் வருகின்றன. இதுதொடர்பாக உங்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க முடியாதா? 18 மாதமாக மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது? சும்மா உட்கார்ந்திருந்தீர்களா? இந்த கோர விபத்திற்கு கடந்த 2021 முதல் இப்போது வரையிலான ராஜ்கோட் மாநகராட்சி ஆணையர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்காததற்காகவும் கடமை தவறியதற்காகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும், இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் எந்த உத்தரவும் பிறப்பிப்பதை தவிர்க்கிறோம். இந்த விவகாரத்தில் கடந்த 4 ஆண்டாக எடுத்த நடவடிக்கை குறித்து மாநகராட்சி சார்பில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்
விளையாட்டு அரங்கம் உரிய அனுமதி பெறாமல் இயங்கியதை தடுக்காமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், மாநகராட்சியின் நகர திட்டமிடல் துறை உதவி பொறியாளர்கள், தீயணைப்பு துறை அதிகாரி உட்பட 7 பேரை குஜராத் அரசு நேற்று சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

* 3வது நபர் கைது
தீ விபத்து தொடர்பாக விளையாட்டு அரங்க நிறுவனத்தின் 6 பார்ட்னர்களில் ஒருவரான யுவராஜ்சிங் சோலங்கி மற்றம் மேலாளர் நிதின் ஜெயின் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு பார்ட்னரான ராகுல் ரத்தோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும் குஜராத் அரசு மீது நம்பிக்கை இல்லை: விளையாட்டு அரங்க தீ விபத்து வழக்கில் நீதிபதிகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Gujarat govt ,AHMEDABAD ,Gujarat government ,Gujarat High Court ,Rajkot, Gujarat ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கூரியர் பார்சல்களில் ரூ.1.12 கோடி கஞ்சா பறிமுதல்