×

பாதுகாப்பு பணியில் இருந்தபோது வாக்கு எண்ணிக்கை மையத்தில் மயங்கி விழுந்து எஸ்ஐ மரணம்: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியின்போது நள்ளிரவில் மயங்கி விழுந்து எஸ்ஐ இறந்தார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தேவிப்பட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு பரமக்குடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ ரவிச்சந்திரன் (59), நேற்று முன்தினம் இரவுப்பணியில் இருந்தார். இரவு உணவு முடிந்து நள்ளிரவில் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறிய ரவிச்சந்திரன் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக, சக போலீசார் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ரவிச்சந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் நேற்று சொந்த ஊரான சாயல்குடிக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு 21 குண்டுகள் முழங்க, போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், 1986ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 

The post பாதுகாப்பு பணியில் இருந்தபோது வாக்கு எண்ணிக்கை மையத்தில் மயங்கி விழுந்து எஸ்ஐ மரணம்: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : SI ,Ramanathapuram ,Anna University ,Devipatnam road ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...