நெல்லை: நெல்லையில் கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜன் உடலை 7 நாட்களுக்கு பின்பு உறவினர்கள் நேற்று பெற்றுச் சென்றனர். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு வாகைகுளத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜன் (30), கடந்த 20ம்தேதி பாளை கேடிசி நகர் ரவுண்டானாவில் உள்ள ஓட்டல் முன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அய்யப்பன், முன்னீர்பள்ளம் ஐயப்பன், வல்லநாடு தம்பான், மேலநத்தம் முத்து சரவணன் ஆகிய நான்கு பேர் முதலில் கைது செய்யப்பட்டனர்.
கூலிப்படையை சேர்ந்த நவீன் உள்பட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தீபக் ராஜனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நவீன், லெப்ட் முருகன், லட்சுமிகாந்தன், சரவணன் ஆகிய 4 பேரை திருச்சி போலீசார் பிடித்து நெல்லை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சுரேஷ், பவித்ரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தீபக் ராஜனின் உடலை வாங்க உறவினர்கள் போலீசாரிடம் சம்மதித்தனர். இதன் பேரில் 7 நாட்களுக்கு பின்னர் நேற்று காலை தீபக்ராஜனின் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரான வாகைகுளத்திற்கு அவரது உடலை உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலம் முடிய 6 மணி நேரம் ஆனது.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகைகுளத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள், சமுதாயத்தினர், பொதுமக்கள், கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தில் தீபக்ராஜனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுடன் பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா மற்றும் பல்வேறு நாட்டு புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தங்களையும் வைத்து அடக்கம் செய்தனர்.
The post பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை 7 நாட்களுக்குப்பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.