×

ஜோலார்பேட்டை அருகே 5 அடி ராட்சத பள்ளம் பயங்கர சத்தத்துடன் விழுந்தது எரிகல்தான்: ஆய்வு செய்த அறிவியல் அலுவலர் தகவல்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி, சொட்டை கவுண்டர் பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த வாரம் இரவு 8 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது. அந்த மர்ம பொருள் விழுந்த இடத்தில் 5 அடி அளவுக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த திருமலை என்பவர் நேற்று முன்தினம் மாலை அந்த பள்ளத்தை பார்த்தபோது, அதிலிருந்து அனல் வீசியுள்ளது.

பொதுமக்கள் திரண்டு பார்த்தபோது, பள்ளத்தில் சாம்பல் தீக்கரை இருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனால் விண்கல் விழுந்திருக்கலாம் என தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து போலீசார் மற்றும் திருப்பத்தூர் தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும் பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து ஆலங்காயம் அடுத்த காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று அந்த பள்ளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நிபுணர்களை அனுப்பி ஆய்வு செய்வதாக தெரிவித்தார். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை’ என்றார். மேலும் மர்ம பொருள் விழுந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி பாதுகாக்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து அந்த இடத்திற்கு பாதுகாப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட அறிவியல் மைய அலுவலர்(பொறுப்பு) ரவிக்குமார் வந்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘5 அடி ஆழ பள்ளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் மற்றும் சாம்பல் மாதிரிகள் சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பகுதியில் விழுந்த மர்ம பொருள் எரிகல் தான். விழுந்த வேகத்தில் மண் சாம்பலாக மாறி உள்ளது. இது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே சுற்றும் சிறு கோளாகவும், பின்னர் பூமி நோக்கி வரும்பொழுது எரிகல்லாகவும் மாறிவிடும்’ என்றார்.

* 2016, 2020ல் மர்ம பொருள் விழுந்து 2 பேர் பலி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016ம் ஆண்டு மர்ம பொருள் விழுந்ததில் கல்லூரியில் பணிபுரிந்த டிரைவர் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தார். மேலும் கல்லூரி கட்டிடத்தில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியது. அப்போதும் விண்கற்கள் விழுந்ததாக தகவல்கள் பரவியது. இதேபோன்று கடந்த 2020ல் மேல் அச்சமங்கலம் ஊராட்சி தண்ணிகட்டி வட்டம் பகுதியில் மர்ம பொருள் விழுந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அங்கு விழுந்த மர்ம பொருள் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

The post ஜோலார்பேட்டை அருகே 5 அடி ராட்சத பள்ளம் பயங்கர சத்தத்துடன் விழுந்தது எரிகல்தான்: ஆய்வு செய்த அறிவியல் அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Jollarpet ,Jolarpet ,Ravi ,Chottai ,Achamangalam panchayat ,Tirupathur district ,Dinakaran ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்