×

தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 1,054 வாகன உரிமையாளர்களிடம் ரூ1.09 கோடி அபராதம் வசூல்: போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 1,054 வாகனங்களிடம் இருந்து ரூ 1.09 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 25ம் தேதி தமிழ்நாடு முழுவதிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களால் திடீர் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தணிக்கையில் 5,463 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அவற்றில் 1,054 வாகனங்களில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக 179 வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி வந்ததற்காகவும், 150 வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி வந்ததற்காகவும், 125 வாகனங்களில் பிரேக் லைட் செயல்படாமல் இருந்ததற்காகவும், 37 வாகனங்கள் உரிமம் மீறி செயல்பட்டதற்காகவும், 58 வாகனங்கள் வரி செலுத்தாமல் இருந்ததற்காகவும், 76 வாகனங்கள் தகுதிச் சான்று இல்லாத காரணத்திற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 129 வாகனங்கள் காப்பீட்டுச் சான்று இல்லாததற்காகவும், 123 வாகனங்களின் ஓட்டுநர்கள் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காகவும், 50 வாகனங்களில் வாகனப் புகைப் பரிசோதனை சான்று இல்லாத காரணத்தினாலும், 4 வாகனங்களில் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி இன்ஜினில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதற்காகவும், 749 வாகனங்களில் இதர விதிமீறல்களுக்காகவும் அபராதம் விதிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, இந்த ஆய்வின் போது 104 வாகனங்கள் கடும் குறைபாடுகளுக்காக விடுவிக்கப்படாமல் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வாகன தணிக்கை மூலம் ரூ1,09,92,629 அபராதமாகவும், வரியாகவும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த கோடை விடுமுறையில் மாநிலம் முழுவதிலும் உள்ள 34,835 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் மாவட்ட ஆய்வு குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. ஆவடியில் ஒரு பள்ளி பேருந்து ஆய்வு செய்யப்பட்ட போது அதனுடைய படிக்கட்டு உடைந்து விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வின் போது இதுபோன்று குறைபாடு உள்ள பள்ளி பேருந்துகள் மீண்டும் பழுது நீக்கம் செய்யப்பட்ட பின்னரே தகுதிச் சான்று ஆய்விற்கு மீண்டும் உட்படுத்தப்படுகிறது. எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனங்களில் தகுதிச் சான்று குறித்த அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 1,054 வாகன உரிமையாளர்களிடம் ரூ1.09 கோடி அபராதம் வசூல்: போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Transport Commissioner Shanmugasundaram ,Chennai ,Traffic ,Safety Commissioner ,Shanmugasundaram ,Commissioner ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...