×

யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்; நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்தது யார்?: சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு

புதுடெல்லி: யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரத்தில் நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்தது யார்? என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சங்கரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி யூடியூபர் சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார்’ என உத்தரவாத மனு தாக்கல் செய்ய யூடியூபர் சங்கர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கு கடந்த 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி ஆகியோர் இருவேறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதில் நீதிபதி சுவாமிநாதன், ‘இந்த விவகாரத்தில் அதிகாரமிக்க இரு நபர் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசி அழுத்தம் கொடுத்தார்கள். அந்த நபர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்து விடுவர் என்பதால், அட்வகேட் ஜெனரல் வழக்கை ஒத்திவைக்க கோரியபோதும் அவசரமாக இறுதி விசாரணைக்கு இந்த வழக்கை எடுத்துக் கொள்ளப்பட்டது’ என்றார்.

மேலும் யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவையும் அப்போது ரத்து செய்திருந்தார். அதேசமயம் நீதிபதி பாலாஜி, யூடியூபர் சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடும்படி, வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவைக்கு புதிய மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

அதில், ‘ யூடியூபர் சங்கர் விவகாரத்தில் உயர் அதிகாரம் மிக்கவர்கள் இருவர் தன்னிடம் பேசியதாக நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எனவே அதனை அடிப்படையாக கொண்டு அந்த இருவர் மீதும் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிஐ அமைப்பு விசாரணைக்கு மாற்றி அமைக்க வேண்டும். அப்போது இதில் உள்ள குற்றவாளிகள் யார்?, அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்து விரைந்து அடையாளம் காண முடியும். மேலும் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிபதி கொண்ட ஒரு அமர்வை உருவாக்கி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை பொருத்தமட்டில் உச்ச நீதிமன்றம் உடனடியாக கையிலெடுத்து விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் உயர்நீதிமன்றத்திற்கு ஒரு பரிந்துரையுடன் கூடிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

The post யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்; நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்தது யார்?: சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,CBI ,New Delhi ,YouTuber ,Shankar ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை...