×

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் பேருந்துகளால் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் பேருந்துகளால் போக்குவரத்து பாதிப்பதோடு பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்திற்கு சேலம், சென்னை, திருப்பதி, பெங்களூரு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் மினி பேருந்துகள் என மொத்தம் நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.

இந்த பேருந்துகள் நிறுத்துவதற்கென தனித்தனியாக இடவசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பேருந்துகள் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அந்தந்த பேருந்துகளின் ஓட்டுநர்கள் நிறுத்தி வைக்காமல் தாறுமாறாக பேருந்துகளை நிறுத்தப்படுவதால் மற்ற பேருந்துகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக பேருந்துகளின் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேருந்துகள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சில நேரங்களில் மற்ற பேருந்துகள் பஸ் நிலையத்திற்குள் உள்ளே செல்ல முடியாமல் துருகம் சாலை பகுதியில் பேருந்துகள் அணி வகுத்து நிற்பதால் அந்த சாலை பகுதியிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் குறிப்பிட்ட நேரங்களில் வெளியூர் செல்லக்கூடிய பொதுமக்கள் சில நேரங்களில் விரைந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அவ்வப்போது கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் துறையினர் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், போலீசார் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்துகின்றபோது மட்டும் பேருந்துகளை சரியாக நிறுத்துவதும் மற்ற நேரங்களில் தொடர்ந்து பேருந்துகளை தாறுமாறாக நிறுத்தப்படுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

எனவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்படுகின்ற பேருந்து ஓட்டுநர்களை காவல் துறையினர் கடுமையாக எச்சரித்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் பஸ் நிலையத்தில் பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் பேருந்துகளால் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kallakurichi bus station ,Salem ,Chennai ,Tirupati ,Bengaluru ,Tiruvannamalai ,Villupuram ,Cuddalore ,Puducherry ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது