வருசநாடு : வருசநாடு அருகே உள்ள சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே கோம்பைத்தொழு மேகமலையில் சின்னச்சுருளி அருவி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அருவி வறண்ட நிலையில் காணப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக தினமும் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றினர். நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் அருவியல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்தனர். வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை அறிவிப்பையடுத்து கடந்த 18ம் தேதி தடை நீட்டிக்கப்பட்டது. அருவி பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது மழையளவு குறைந்துள்ளதால், அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது. இதையடுத்து அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடையை வனத்துறையினர் நீக்கினர். இதனால் நேற்று காலை முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இருப்பினும் அருவி பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடும்பாறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யானைகெஜம் அருவிக்கு தடை
மயிலாடும்பாறை அருகே உள்ள யானைகெஜம் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக யானைகெஜம் அருவியில் நீர்வரத்து சீராகாததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சீரானது நீர்வரத்து சின்னச்சுருளியில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.