×

முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை; மாடுகளுக்கும் லைசென்ஸ் பெறுவதை கட்டாயமாக்கிய சென்னை மாநகராட்சி: அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதி

சென்னை: சென்னை மாநகரம் மக்கள் தொகை அதிகம் கொண்ட இட நெருக்கடி மிகுந்த நகரம் என்பதால், செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கோ அல்லது மாடுகள் வளர்பதற்கோ ஏற்ற நகரம் அல்ல. ஆனால் பாரம்பரியத்தை கைவிடாத குடும்பத்தினர் பலர் மாடுகளை தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அதேபோன்று அடுக்குமாடி குடியிருப்புகளாக இருந்தாலும் செல்லப்பிராணிகளை தங்கள் அறைக்குள்ளே வைத்து செல்லமாக வளர்த்து வருகின்றனர். கிராமப்புறங்களில் இதுபோன்ற பிரச்னைகள் கிடையாது. இவைகளை வளர்ப்பதற்கு ஏற்ற இடங்கள் இருக்கும். மாடுகள் மேய்வதற்கான மேய்ச்சல் பகுதிகள் இருக்கும். இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் சென்னையில் மாடுகளுக்கு என்று தொழுவம் அமைத்து அவற்றை வளர்ப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது.

தொழுவம் அமைக்கும் இடத்தில் பல மாடி வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் மாடு வளர்ப்பதற்கு அவ்வளவு இடத்தை யாரும் ஒதுக்குவதில்லை. இதனால் பால் கறப்பதற்கு மட்டுமே அவற்றை வீடுகளுக்கு அழைத்து வருகின்றனர். மற்ற நேரங்களில் சாலைகளில் தான் சுற்றி திரிகின்றன. இதனால் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளும், அவற்றின் அட்டகாசமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. பலமுறை சாலைகளில் ஓடி, இருசக்கர வாகன ஓட்டிகள் மீது போதி விபத்தை ஏற்படுத்தியுள்ளன. அதுமட்டுமல்ல சில நேரங்களில் பொதுமக்களை முட்டி தள்ளுவதால் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் தொடர் கதையாகி வருகிறது. சமீபகாலமாகவே சென்னையில் சுற்றித்திரியும் நாய்களால், சிறுவர், சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதனால் தான், நாய்களை வளர்ப்பது குறித்த விதிமுறைகளை, சென்னை மாநகராட்சி வகுத்து வருகிறது. அத்துடன் சில கட்டுப்பாடுகளையும், அபராதங்களையும் அமல்படுத்தி உள்ளது. அதுபோலவே, மாடுகள் விஷயத்திலும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் புற்கள் முளைத்திருப்பதால், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மேய விடுகிறார்கள். இதனால், இரவு நேரங்களில், சாலையின் நடுவில் படுத்து கிடக்கும் மாடுகளைக் கண்டு, கனரக வாகனங்கள் திடீரென பிரேக் அடிப்பது. பக்கவாட்டில் செல்வது போன்ற காரணங்களாலும் விபத்துகள் நடக்கின்றன. அதேபோன்று, காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும், வேலைக்கு செல்வோரும் பரபரப்புடன் செல்லும்போது, கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருகின்றன.

இதன்காரணமாக போக்குவரத்துக்கு மிகவும் பாதிக்கப்படுவதுடன், பைக்கில் வேகமாக செல்பவர்கள், திடீரென எதிரில் இருக்கும் மாடுகளின் மீது மோதிவிடுவதால், நிலைதடுமாறி விழுந்து கை, கால்களை உடைத்து காயமடைகிறார்கள். சிலசமயம், உயிரிழப்பு வரை சென்றுவிடுகிறது. சில இடங்களில், நடுரோட்டிலேயே மாடுகள் படுத்து கிடக்கின்றன. சிலசமயம், சாலைகளில் செல்லும் மாடுகள் திடீரென சண்டையிட்டு கொள்வதாலும் பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். அதனால் தான், கால்நடைகளை வளர்ப்பவர்கள் மாடுகளை உரிய கவனத்துடன் பராமரிக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், பள்ளிக்கு சென்று வந்த சிறுமியை மாடு முட்டி தள்ளிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகியதை தொடர்ந்து சென்னையில் மாடுகள் வளர்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.

மேலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. பிடிபடும் மாடுகளுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டாலும் அவற்றை எல்லாம் பெரிய அளவில் மாட்டு உரிமையாளர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்கள் மாடுகளை பிடிக்க வந்தால் அப்போது மட்டும் அடைத்து வைத்து கொள்கின்றனர். அதையும் மீறி நடவடிக்கை எடுக்க வரும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் மாடுகள் விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளனர். ஆனாலும் மாடுகள் வளர்ப்பதை முறைப்படுத்தினால் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அந்தவகையில், சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை முட்டி தாக்கும் அசம்பாவிதங்களும் ஏற்படுகின்றன. மேலும் சாலையில் படுத்து இருக்கும் மாடுகளினால் விபத்துகளும் நடக்கின்றன. கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமித்தபடி உலா வருவதாலும் விபத்துகள் நேருகின்றன. மாடுகளை வளர்க்க போதிய இடம், தொழுவம் இல்லாமல் வளர்ப்பதால் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகிறது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் தான், மாடு வளர்ப்பதை முறைப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் தான் மாடுகள் வளர்ப்பதற்கும், தொழுவங்களுக்கு உரிமம் பெறுவதும் கட்டாயம் என்ற புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய விதி ஜூன் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. எனவே மாட்டு உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். மாடு வளர்ப்பதை முறைப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் தான் மாடுகள் வளர்ப்பதற்கும், தொழுவங்களுக்கு உரிமம் பெறுவதும் கட்டாயம் என்ற புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது.

The post முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை; மாடுகளுக்கும் லைசென்ஸ் பெறுவதை கட்டாயமாக்கிய சென்னை மாநகராட்சி: அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதி appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...