×

கந்து வட்டி வசூலித்த பெண் கைது பைக்குகள், ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

 

வேலூர், மே 27: காட்பாடியில் கந்து வட்டி வசூலித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பைக்குகள், ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி(43). இவர் அதேபகுதியைச் சேர்ந்த தாரா(50) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடனாக ₹40 ஆயிரம் பெற்றுள்ளார். அதற்கு வார வட்டியாக ₹2 ஆயிரம் வசூலித்து வந்துள்ளார். இந்நிலையில் சில வாரங்கள் வட்டி கட்டவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த தாரா, ஜெயந்தியை பணத்தை கட்ட கூறி தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து ஜெயந்தி காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், தாரா கடனுக்கு அதிக வட்டி வசூலிப்பதாகவும், தான் ₹40 ஆயிரம் அவரிடம் கடனாக பெற்றதற்க்கு வார வட்டி ₹2000 கட்ட வேண்டும் எனவும், வட்டி கட்ட சிறிது கால தாமதம் ஆனால் தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தாரா(50) கந்து வட்டி வசூலிப்பது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து இருச்சக்கர வாகனங்கள், ஏடிஎம் கார்டுகள், கையொப்பமிட்ட பாண்டு பத்திரங்கள், செல்போன்கள், ஆர்.சி.புத்தகங்கள் மற்றும் ஆதார் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post கந்து வட்டி வசூலித்த பெண் கைது பைக்குகள், ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Gadpadi ,Jayanthi ,Katpadi Sengutta ,Tara ,
× RELATED தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காட்பாடியில் பரபரப்பு