×

அழகாபுரி நீர் தேக்கத்தில் இருந்து 21 ஆண்டுக்கு பின் வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் வரத்து-விவசாயிகள் மகிழ்ச்சி

வேலாயுதம்பாளையம் : வெள்ளியணை குளத்திற்கு 21 ஆண்டுகளுக்குப்பின் அழகாபுரி நீர்த்தேக்க நீர் வந்து சேர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சியில் சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு ஏதுவாக திண்டுக்கல் மாவட்டம் அழகாபுரி அருகே அமைந்துள்ள அழகாபுரி நீர்த்தேக்கத்திலிருந்து நீர்வழி பாதை அமைத்து அதில் 150 கன அடி தண்ணீர் கொள்ளளவு வரக்கூடிய அளவிற்கு வாய்க்கால் அமைக்கப்பட்டது. இருப்பினும் அழகாபுரி ஏரி ஆண்டுதோறும் நிரம்புவதில்லை. இவ்வாண்டு தமிழகத்தில் பருவமழை நல்ல நிலையில் பெய்துள்ளதால் அழகாபுரி நீர்த்தேக்கத்திற்கு போதிய அளவு தண்ணீர் வந்து நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளது. இந்நிலையில் வெள்ளியணை ஏரிக்கு தண்ணீர் பகிர்ந்து விடக்கூடிய கால்வாயில் முன்கூட்டியே தண்ணீரை பிரித்து விடாத காரணத்தால் கன மழை காலத்திலும் தண்ணீர் வரவில்லை.வெள்ளியணை, பிச்சம்பட்டி, பாகநத்தம் ,6 ரோடு, மூக்கணாங்குறிச்சி, மணவாடி மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த பொதுமக்கள் வெள்ளியணை ஏரிக்கு தண்ணீர் பகிர்ந்து விட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோரிடம் நேரடியாகவும் கோரிக்கையாகவும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். அதனை தொடர்ந்து கடந்த 10 தினங்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் கூட்டாக அழகாபுரி நீர்தேக்கத்தில் இருந்து வெள்ளியணை ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் கடந்த 10 நாட்களுக்கு முன் 100 கனஅடி தண்ணீர் வெள்ளியனை ஏரிக்கு திறந்து விடப்பட்டது.அந்தத் தண்ணீரானது நீர்த்தேக்கத்திலிருந்து வரும் வழியில் போதிய தூர்வாரும் பணி நடைபெறாத காரணத்தால் முள் செடிகள் மற்றும் புதர்கள் மண்டி கிடந்ததால் தண்ணீரின் வேகம் மிகவும் குறைந்து வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்னால் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று 10ம் தேதி காலை 8 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் கூடலூர் அருகே வெள்ளியணை ஏரிக்கு வாய்க்காலில் தண்ணீர் வந்தது.தற்போது ஏரிக்கு தண்ணீர் அளவு வெறும் 20 கனஅடிக்கும் குறைவாகவே இருக்கும் .இந்த தண்ணீர் இன்னும் பத்து நாட்கள் வந்தால் கூட முழு கொள்ளளவை எட்ட முடியாது. எனவே தண்ணீரின் அளவை அதிகப்படுத்தி 20 ஆண்டுக்கு பின்பு தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் 400 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வெள்ளியணை குளம் முழு கொள்ளளவை எட்டினால் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு கிருஷ்ணராயபுரம், குளித்தலை ,கரூர் ஆகிய ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் உள்ள சுமார் 20 ஆயிரம் மானாவாரி நிலங்கள் பாசன வசதிகள் பெற்று வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் பூமி குளிர்ந்து நிலையில் உள்ளதால் நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்பட கூடிய தண்ணீர் வீணாகாமல் நேரடியாக ஏரிக்கு செல்ல வசதியாக இருக்கும் இதனைக் கருத்தில் கொண்டு தற்போது ஓரளவு மழை பெய்து வருவதால் வெள்ளியணை ஏரி நிரம்பும் வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post அழகாபுரி நீர் தேக்கத்தில் இருந்து 21 ஆண்டுக்கு பின் வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் வரத்து-விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Alagapuri Reservoir ,Velliani ,Pond ,Velayuthampalayam ,Veliyani Pond ,Vellianai ,Pond-Farmers ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன!!