×

வெளுத்துக் கட்டிய மழையால் விறுவிறுப்பில்லை நிறைவடைந்தது கொடைக்கானல் கோடை விழா: வருகை குறைந்தாலும்… வருவாய் குறையவில்லை…

கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த 17ம் தேதி தொடங்கிய 61வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. கடந்தாண்டு 10 நாட்களில் 78,172 சுற்றுலாப் பயணிகள் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை கண்டு ரசித்து உள்ளனர்.

இவர்கள் மூலமாக ரூ.23 லட்சத்து 32 ஆயிரத்து 755 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்தாண்டு 10 நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் மூலமாக 26 லட்சத்து 2 ஆயிரத்து 150 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நுழைவுக் கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்பட்டதே வருவாய் அதிகரிப்புக்குக் காரணம் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவிற்கு இ-பாஸ் நடைமுறையும், தொடர்மழையும் காரணம் என்று கூறப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் வருகை குறைவால் வர்த்தக வருவாயும் குறைந்து விட்டதாக சிறு வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூறினர்.

வரும் ஆண்டுகளில் இ-பாஸ் நடைமுறையை அரசு கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு கொடைக்கானல் டிஎஸ்பி மதுமதி பரிசுகள் வழங்கினார். நிறைவு விழாவில் சென்னையைச் சேர்ந்த நாட்டிய குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

The post வெளுத்துக் கட்டிய மழையால் விறுவிறுப்பில்லை நிறைவடைந்தது கொடைக்கானல் கோடை விழா: வருகை குறைந்தாலும்… வருவாய் குறையவில்லை… appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Summer Festival ,Kodaikanal ,61st flower fair and summer festival ,Flower fair ,festival ,Dindigul district ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் கோடை விழாவில் படகு போட்டி: சுற்றுலா பயணிகள் பங்கேற்பு