×

தேர்தல் பணம் வினியோக பிரச்னை, போஸ்டர் யுத்தம்.. பாஜ நிர்வாகிகளுடன் இன்று அண்ணாமலை ஆலோசனை

சென்னை: சென்னையில் இன்று காலை பாஜ நிர்வாகிகளுடன் அண்ணாமலை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மக்களவை தேர்தலில் பணம் வினியோக பிரச்னை, போஸ்டர் யுத்தம் போன்ற பிரச்னைகள் இந்த கூட்டத்தில் புயலை கிளப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4ம் தேதி எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில் தமிழக பாஜ நிர்வாகிகளுடன் பாஜ தலைவர் அண்ணாமலை இன்று திடீர் ஆலோசனை நடத்துகிறார். சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹரில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநில நிர்வாகிகள் அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வேட்பாளர்கள், பாராளுமன்ற தொகுதி வாரியாக மையக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டம் முக்கிய கூட்டம் என்பதால் எல்லோரும் கட்டாயம் கலந்து கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தொகுதிகளின் நிலவரங்கள், செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட இருப்பாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ 19 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜ கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், ஜான்பாண்டியன் ஆகியோர் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். மொத்தம் 23 தொகுதியில் பாஜவின் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜ சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளும் உருவானது. தேர்தல் முடிந்த பின்னர் இந்த பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

அதாவது, தேர்தல் செலவுக்காக வழக்கப்பட்ட பணத்தை நிர்வாகிகள் பெருமளவில் வாரி சுருட்டி கொண்டனர். கடை கோடி தொண்டன் வரை பணம் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது கட்சியினரின் வாட்ஸ் அப் குரூப்பில் விவாத பொருளானது. இதனால், வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவங்கள் அரங்கேறியது. குறிப்பாக சென்னையில் அண்ணாநகர், பெரம்பூர், துரைப்பாக்கம் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியதை காண முடிந்தது.

இந்த புகார் போலீஸ் நிலையம் வரை சென்றது. பாஜவினரின் மீது பல இடங்களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. சில மாவட்டங்களில் பணம் சுருட்டியதாக சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டிய சம்பவமும் அரங்கேறியது. இப்படி தேர்தலில் பணம் வினியோக பிரச்னை தொடர்பாக பாஜ தலைமைக்கு தொடர்ந்து புகார் மேல் புகார் வந்தது. தேர்தல் ரிசல்ட் வருவதற்குள் இப்படி புகார் வந்தது. கட்சி தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டம் இன்று நடக்கிறது. இதனால், இன்றைய கூட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்போது பணப்பிரச்னையும் பூதாகரமாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது.

* இன்றைய கூட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பணப்பிரச்னையும் பூதாகரமாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது

The post தேர்தல் பணம் வினியோக பிரச்னை, போஸ்டர் யுத்தம்.. பாஜ நிர்வாகிகளுடன் இன்று அண்ணாமலை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Chennai ,Lok Sabha ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...