×

பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை பாயும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள், முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு தமிழக இளைஞர்கள் பலர், முகவர்கள் மூலம் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றவுடன் சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

அம்மாதிரி சட்டவிரோதமான இணையதள பணிகளை செய்ய மறுக்கும் நபர்கள் கடுமையாக துன்புறுத்தப்படுகின்றனர். இதுவரை மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 83 தமிழர்களை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்துள்ளது. இம்முகவர்கள் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பணிக்கென்று மிக எளிமையான நேர்காணல் வழியாகவும், எளிமையான தட்டச்சு தேர்வு வைத்து தெரிவு செய்வதோடு அதிக சம்பளம், தங்குமிட வசதி, நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் விசா ஏற்பாடு என்று ஆசை வார்த்தைகளைக் கூறி இளைஞர்களை கவர்கின்றனர்.

தகவல் தொழில்நுட்ப பணி என்று நம்பி சென்ற இளைஞர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, லாவோஸில் உள்ள Golden Triangle என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கடுமையான மற்றும் கட்டுப்பாடான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறைபிடிக்கப்படுகின்றனர். தாய்லாந்து அல்லது லாவோஸ் நாடுகளில் வருகைக்கான விசா வேலைவாய்ப்பை அந்நாடுகள் அனுமதிக்காது.

சுற்றுலா விசா, சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றன. லாவோஸில் மனிதக் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற மோசடி வலையில் நமது இளைஞர்கள் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கை உணர்வுடன், ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் வேலைக்கான விசாவின் உண்மைத்தன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் குறித்து பயணிப்பதற்கு முன்னர் பணிபுரிய செல்ல உள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.
லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568, மின்னஞ்சல் cons.vientianne@mea.gov.in மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின், மின்னஞ்சல் cons.phnompehh@mea.gov.in. visa.phnompehh@mea.gov.in, mailto:visa.phnompehh@mea.gov.in ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அயலக வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீர்வு காண தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 18003093793 (இந்தியாவிற்குள்), 8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு), 8069009900 (Missed Call No). மேலும் குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலர், சென்னை (Protector of Emigrants, Chennai) உதவி எண்- 90421 49222 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள், முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை பாயும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Chennai ,Tamil Nadu government ,Union government ,Consular Tamil Welfare Department ,
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்டு...