×
Saravana Stores

திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருச்சி: திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் நேற்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்தால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 48.150 கன அடியாக உள்ளது. அணைக்கு 784 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 2,103 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லை. எனவே இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை.

அதே நேரம் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே ஜூலை மாதத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் மேட்டூர் இருந்து வரும் தண்ணீரை பிரித்து அனுப்ப, திருச்சி மாவட்டம் எலமனூர்-வாத்தலை இடையே முக்கொம்பு தடுப்பணை உள்ளது. இங்கிருந்து தான் காவிரியில் வரும் வெள்ளம் கொள்ளிடம் ஆற்றுக்கு பிரிகிறது. காவிரியின் குறுக்கே 595.30 மீட்டர் நீளத்துக்கு அமைந்துள்ள தடுப்பணை, அதிகபட்சமாக வினாடிக்கு 1,80,000 கன அடி நீர் வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்னதாக முக்கொம்பு தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி முக்கொம்பு காவிரி ஆற்றில் உள்ள 41 ஷட்டர்களும் ரூ.17 கோடி மதிப்பில் பழுது பார்ப்பு பணிகளை கடந்த பிப்ரவரி முதல் நீர்வளத்துறை மேற்கொண்டுள்ளது.

ஷட்டரில் உள்ள ரோலர் சக்கரங்கள் மேலே தூக்கும்போது, இறக்கும்போது அடிக்கடி அடிபட்டு அவற்றை இயக்குவது கடினமாகிறது. ஷட்டர்களை தூக்கும் சங்கிலி மற்றும் ரப்பர் சீல்களும் சேதமடைந்துள்ளன. ஷட்டர் பிளேட்டுகள் அரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி காரணமாக காவிரிக்கு வரும் தண்ணீரை அப்படியே கொள்ளிடத்தில் திருப்பி விட முடிவு செய்யப்பட்டது. இதற்காக காவிரி ஆற்றில் மண்ணால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு தண்ணீர் கொள்ளிடத்துக்கு திருப்பி விடப்பட்டது. நேற்று மதியம் முதல் கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.அதிகபட்சமாக தண்ணீர் வரும்போது தான் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது ஷட்டர் சீரமைப்பு பணியின் காரணமாகத்தான் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், காவிரி கதவணையில் உள்ள ஷட்டர்களில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் உடனடியாக முடிக்கப்பட வேண்டி உள்ளதால் இன்று (நேற்று) முதல் முக்கொம்பு மேலணையலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே கொள்ளிட கரையோர மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை கொள்ளிடம் ஆற்றில் ஓட்டிச்செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Trichy Triangular ,Kollidu ,Trichy ,Trichy Mukkombi ,Kollid ,Mettur dam ,Kuruvai ,Trichy triangle ,Dinakaran ,
× RELATED தென்னூரில் 8,000 அழுகிய முட்டைகளை பயன்படுத்திய 2 பேக்கரிகளுக்கு ‘சீல்’