×

ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியில் 15 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்: 70 பேர் ெகாண்ட குழுவினர் மும்முரம்

தர்மபுரி: தர்மபுரி வனக்கோட்டம் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு வனச்சரக அடர்ந்த வனப்பகுதியில், 15 வனக்காவல் பீட்களில் யானைகள் கணக்கெடுப்பு 3 நாள் நடந்தது. கடைசியாக எடுத்த கணக்கெடுப்பில் 144 யானைகள் தர்மபுரி மாவட்டத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. தென்னிந்தியாவில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி, கடந்த 23ம்தேதி தொடங்கியது. மாநில வனத்துறை சார்பில் நடைபெறும் இப்பணி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்தது. தொடர்ந்து 3 நாட்கள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. நேற்று கடைசி நாளாக யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. இதில் யானைகளின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். தர்மபுரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய மூன்று வனசரகங்களில், யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 23ம்தேதி தொடங்கி, நேற்று (25ம்தேதி) முடிந்தது. தர்மபுரி வனக்கோட்டத்தில், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் 2 ஏசிஎப் மேற்பார்வையில், 3 வனச்சரகர்கள் அடங்கிய வனத்துறையினர் 15 குழுக்களாக பிரிந்து 70 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தர்மபுரி வனக்கோட்டத்தில் உள்ள ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு வனச்சரகத்தில் 15 வனக்காவல் சுற்று பீட்டுகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி, அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் நடமாடுவதை நேரில் பார்த்து கணக்கெடுக்கப்பட்டது. பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியில் கூட்டம், கூட்டமாக யானைகள் நின்று கொண்டிருந்தன. அவற்றை வனத்துறை புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்தனர். நேற்று முன்தினம் சாணம் (லத்தி), கால்தடங்களை வைத்து யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. நேற்று (25ம்தேதி) வனத்தில் உள்ள தடுப்பணை, குட்டை, ஏரி, ஆற்றுக்கால்வாய் மற்றும் தண்ணீர் குடிக்க வரும் தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நேரில் பார்த்து யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 23ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. தர்மபுரி வனக்கோட்டத்தில், 70 பேர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். இப்பணியில் ஈடுபடுபவர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு வழிகாட்ட ஏதுவாக, வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த குழுவினர் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். யானைகளை நேரில் பார்த்தும், அதன் கால் தடங்கள் மற்றும் சாணத்தின் மூலமாகவும் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் தூரம் அந்த யானைகள் செல்கின்றன என்பது குறித்தும், வனத்துறையினர் ஆய்வு செய்தார்கள்.

மூன்று நாள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் அரசுக்கு அறிக்கையாக அளிக்கப்படும். தர்மபுரி வனக்கோட்டத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 144 யானைகள் இருந்தது தெரியவந்தது. தமிழகத்தில் தர்மபுரி வனக்கோட்டம் 8வது இடத்தை பிடித்தது. நடப்பாண்டு இதே நிலை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் யானைகள் அதிகமாக இருந்தது. தற்போது இடம்பெயர்ந்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு சென்று விட்டன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியில் 15 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்: 70 பேர் ெகாண்ட குழுவினர் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Okanagan, Bennagaram forest ,Dharmapuri ,Vanakottam ,Okenakkal ,Bennagaram ,Palakodu Forestry ,Dharmapuri district ,South India ,Dinakaran ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு