×

திருவாலங்காட்டில் பரபரப்பு கோயில் ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் காயம், காவல் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

 

திருத்தணி, மே 26: திருவாலங்காட்டில், திரவுபதி அம்மன் கோயில் ஊர்வலத்தில், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, 2 பேர் காயமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சிக்குட்பட்ட, பாஞ்சாலி நகர் பகுதியில் திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்று வரும் திருவிழாவில், முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள நடுத்தெருவில் திரவுபதி அம்மன் வீதியுலா நடைபெற்றது. அந்த கிராமத்தை சேர்ந்த சேகர்(40) என்பவர், வீட்டின் வெளியே மாட்டினை கட்டி வைத்துள்ளார். அப்போது உதயகுமார்(18), லட்சுமணன்(19) ஆகிய இருவரும், ஊதுகுழல் கொண்டு மாட்டின் காதில் ஊதி உள்ளனர். இதனால் மாடு மிரண்டது. இதனைக்கண்டு ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர் சேகர் தாக்கியதில் உதயகுமார், லட்சுமணன் இருவரும் காயமடைந்தனர். அவர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால், இருதரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.

போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். மோதல் சம்பவம் தொடர்பாக, புகார் செய்ய இரு தரப்பினர், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் நேற்று குவிந்தனர். அப்போது பெண்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவல்நிலைய வளாகத்தில் தள்ளமுள்ளு ஏற்பட்டது. அவர்களை, இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இருதரப்பினர் புகாரின் பேரில் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்த போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். அம்மன் ஊர்வலத்தில் கோஷ்டி மோதல் சம்பவம் திருவாலங்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருவாலங்காட்டில் பரபரப்பு கோயில் ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் காயம், காவல் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvalangat ,Tiruthani ,Thiruvallur District ,Tiruvalangadu ,Panchali ,Nagar ,Tiruvalangadu Panchali Nagar ,Tirupati Amman temple Dimiti festival ,Tiruvalangadu temple ,
× RELATED காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்