×

வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கு, தினசரி 700 வாகனங்களில் 7,000 டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வரத்து குறைந்தது. குறிப்பாக, 540 வாகனங்களில் 5,000 டன் காய்கறிகள் மட்டுமே வருகிறது. வரத்து குறைவால் காய்கறி விலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக, தினசரி 65 வாகனங்களில் தக்காளி வரத்து இருந்த நிலையில், நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 35 வாகனங்களில் மட்டுமே தக்காளி வந்ததால், விலை மேலும் அதிகரித்தது. ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.50க்கும், பெங்களூரு தக்காளி ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.30ல் இருந்து ரூ.35க்கும் சின்ன வெங்காயம் ரூ.60ல் இருந்து ரூ.70க்கும், பீட்ரூட், சவ்சவ், கேரட் ரூ.50ல் இருந்து ரூ.60க்கும் உருளை கிழங்கு, நூக்கல் ரூ.35ல் இருந்து ரூ.45க்கும், முள்ளங்கி, கோவைக்காய், கொத்தவரங்காய் ரூ.30ல் இருந்து ரூ.40க்கும் வெண்டைக்காய், பாவக்காய், சேனைக்கிழங்கு, வெள்ளரிக்காய் ரூ.40ல் இருந்து ரூ.50க்கும், முட்டைகோஸ், காலிபிளவர் ரூ.25ல் இருந்து ரூ.35க்கும், காராமணி ரூ.60ல் இருந்து ரூ.70க்கும், புடலங்காய் ரூ.45ல் இருந்து ரூ.55க்கும்,

முருங்கைக்காய் ரூ.60ல் இருந்து ரூ.80க்கும், பச்சை மிளகாய் ரூ.80க்கும், பூண்டு ரூ.150ல் இருந்து ரூ.380க்கும், அவரைக்காய் ரூ.80ல் இருந்து ரூ.90க்கும், பீரக்கங்காய் ரூ.70ல் இருந்து ரூ.80க்கும் குடைமிளகாய் ரூ.180ல் இருந்து ரூ.190க்கும் விற்பனை செய்யப்பட்டது
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘‘வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது,’’ என்றார்.

The post வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Chennai ,Karnataka ,Kerala ,Andhra Pradesh ,Maharashtra ,Tamil Nadu ,
× RELATED கோயம்பேடுக்கு வரத்து குறைவு...