×

உன்னை வழி கேட்டதுக்கு இங்க கொண்டு வந்து நிறுத்திட்டியே.. சொதப்பிய கூகுள் மேப்பால் கால்வாயில் சிக்கிய பயணிகள்: கேரளாவில் சோகம்

கோட்டயம்: கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதால் கேரளா சென்ற சுற்றுலா பயணிகள் கால்வாய்க்குள் சிக்கி கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. தற்போது நவீனயுகத்தில் புதிய இடங்களுக்கு செல்லும் யாரும் மனிதர்களிடம் வழி கேட்பதே இல்லை. எந்நேரமும் நம் கைகளில் தவழும் மொபைல் போன் தான் நமக்கு எல்லாவற்றுக்கும் வழிகாட்டுகிறது. அடுத்த தெருவுக்கு போககூட நாம் கூகுள் மேப்பையே நம்பி உள்ளோம். கூகுள் மேப்பில் போக வேண்டிய இடத்தை பதிவிட்டால், எந்த வழியில் போக வேண்டும், போய் சேர எவ்வளவு நேரமாகும், போகும் வழியில் போக்குவரத்து நெரிசல் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடும்.

ஆனால் இந்த கூகுள் மேப்புகள் சில சமயங்களில் தவறான பாதையை காட்டி விடுகின்றன. பராமரிப்பின்றி மூடி கிடக்கும் பாதை வழியிலும் நம்மை அனுப்பி வைத்து சிக்க வைத்து விடுகின்றன. அதுவும் மழைகாலங்களில் கூகுள் மேப்பை நம்பி சென்ற பலர் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவின் பல இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேர் கேரளாவுக்கு ஒரு சொகுசு காரில் சுற்றுலா சென்றுள்னர். அவர்கள் நேற்று அதிகாலை ஆலப்புழா சென்று கொண்டிருந்தபோது கனமழை காரணமாக சுற்றுலா குழுவினர் சென்ற பாதை ஓடை வெள்ளம் காரணமாக தண்ணீரில் மூழ்கியிருந்தது.

அப்போது பாதை தெரியாததால் சுற்றுலா குழுவினர் கூகுள் மேப் உதவியை நாடி, அதுகாட்டிய வழியில் காரை ஓட்டி சென்றுள்ளனர். ஆனால் மேப் காட்டியது கால்வாய்க்கான வழி. அது தெரியாமல் சென்ற சுற்றுலா குழுவினர் காருடன் கால்வாய்க்குள் சிக்கி கொண்டனர். இதைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் காரில் இருந்த 4 பேரையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர். கேரளாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூகுள் மேப் உதவியுடன் சென்ற மருத்துவர்கள் 2 பேர் ஆற்றில் விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

The post உன்னை வழி கேட்டதுக்கு இங்க கொண்டு வந்து நிறுத்திட்டியே.. சொதப்பிய கூகுள் மேப்பால் கால்வாயில் சிக்கிய பயணிகள்: கேரளாவில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kottayam ,Dinakaran ,
× RELATED மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் உறவினரை வெட்டி கொன்ற தொழிலாளி