×

போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்-குரும்பூர் சாலை சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாசரேத்: போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள நாசரேத்-குரும்பூர் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத்-குரும்பூர் இடையே உள்ள ரயில்வே ஸ்டேஷன் சாலை, கே.வி.கே. சாமி சிலை அருகே மற்றும் பிரகாசபுரம், மூக்குப்பீறி, ஒய்யான்குடி, கச்சனாவிளை, துரைசாமிபுரம், நெய்விளை, புன்னைநகர் சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாகவும், பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. மேலும் சமீபத்தில் பெய்த மழையினால் சாலை படுமோசமாக உள்ளது. இதன் வழியாக தினமும் ஏராளமான அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் இதன் வழியாக தான் சென்று வருகிறார்கள். இந்த படுமோசமான சாலையினால் அடிக்கடி சிறு விபத்துக்கள் நடந்து வருகிறது. வெளியூரிலிருந்து பஸ்கள் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் பஸ்கள், வாகனங்கள் நிலை தடுமாறும் போதே இப்பகுதி வந்து விட்டது என என்னும் அளவுக்கு சாலை மோசமாக காட்சியளிக்கிறது. மேலும் புன்னைநகர் கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கும் இதன் வழியாக தான் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை சீரமைக்க கோரி நாசரேத் நகர வியாபாரிகள் சங்கம், வணிகர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காமராஜர் ஆதித்தனார் மன்றம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் உள்ளன. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் நாசரேத் ஐஜின்குமார் கூறுகையில், ‘இந்த சாலையினால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றன. இச்சாலையை விரைவில் சீரமைக்காவிடில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும்’ என்றார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள நாசரேத்-குரும்பூர் இடையே உள்ள பிரகாசபுரம், மூக்குப்பீறி, ஒய்யான்குடி, கச்சனாவிளை, துரைசாமிபுரம், நெய்விளை, புன்னைநகர் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவ- -மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்-குரும்பூர் சாலை சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nazareth-Kurumpur road ,Nazareth ,Nazareth-Kurumpur ,Dinakaran ,
× RELATED நாசரேத் ரயில்வே கேட் அருகே கோடை...