×

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்கிற அண்ணாமலையின் கருத்து தவறானது: வி.கே.சசிகலா அறிக்கை

சென்னை: ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்கிற அண்ணாமலையின் கருத்து தவறானது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை, ஜெயலலிதாவைப் பற்றி தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது. ஜெயலலிதா சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்.

ஜெயலலிதா “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தன் வாழ்நாள்முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர் இந்து, இஸ்லாமியர் கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி ஜெயலலிதா தான் என்பது நாடறிந்த உண்மை. சாதி மத பேதங்களை கடந்து ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தன்னை அர்பணித்துக்கொண்ட மாபெரும் தலைவர் ஜெயலலிதா.

“அம்மா என்றால் அன்பு” என்ற தாய்மைக்கு இலக்கணமாக நம்மோடு வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா புரட்சித்தலைவரை போன்று, புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். ஜெயலலிதா, தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த அத்துனை மக்கள்நலத் திட்டங்களும் இன்றைக்கும் பயனளித்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக பெண்ணினத்தை பாதுகாத்திடவும். அவர்களது நலனுக்காகவும் கொண்டு வந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் வரலாற்றில் முத்திரை பதித்தவை என்பதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஜெயலலிதாவின் விடா முயற்சியால் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றதிற்காக 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து.

அதனை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து “சமூக நீதி காத்த வீராங்கனை” என்று போற்றப்பட்டவர் ஜெயலலிதா என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். சத்துணவு தந்த சரித்திர நாயகன் வழிவந்த ஜெயலலிதா உலகமே வியந்து பார்க்கும் வகையில் அம்மா உணவகம் தந்து எண்ணற்ற ஏழைகளின் பசியைப் போக்கிய அன்னலட்சுமியாக வாழ்ந்து காட்டினார். ஆறு முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று தமிழக மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றும் வகையில் ஆட்சி செய்து “முதல்வர்” என்ற பதவிக்கு பெருமை சேர்த்த உன்னத தலைவராக விளங்கினார்.

“ஜெ ஜெயலலிதா என்னும் நான்” என்று இந்த தமிழ் மண்ணில் எப்போதெல்லாம் உச்சரிக்கப்பட்டதோ, அந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் தங்களது உரிமைகளை பறிகொடுத்து விடாமல் வாழமுடிந்தது. மேலும் மகிழ்ச்சியோடும். பாதுகாப்போடும் தமிழக மக்களால் இருக்க முடிந்தது. ஏழை எளியவர்களுக்கு அம்மாவாக, அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது.

அனைவரையும் சமமாக மதித்த ஒரே ஒப்பற்ற தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் இருந்தவர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலங்களில் அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதுகாப்போடு இந்த தமிழ் மண்ணில் வாழமுடிந்தது. தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வைத்து இருந்த பெருமைஜெயலலிதா அவர்களையே சேரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்கிற அண்ணாமலையின் கருத்து தவறானது: வி.கே.சசிகலா அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Jayalalitha ,V. ,Chennai ,K. Sasikala ,Chief Minister ,Jayalalithaa ,Tamil Nadu ,Hindu ,Sasikala ,
× RELATED மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த...