×
Saravana Stores

கனமழை பெய்தும் நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக்கழிவுநீர்

*விவசாயிகள் கவலை

காங்கயம் : கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியாக காவிரியுடன் கலக்கும் நொய்யல் ஆறு, கரூர் மாவட்டங்களில் உள்ள ஊட்டுக்கால்வாய் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பயன்பெறும் வகையில் இருந்துள்ளது.திருப்பூர் சாயக்கழிவு நீரில் உப்பு, அமிலம் தன்மை என்ற டிடிஎஸ் அளவு அதிகரித்து கலந்து சென்றதால், சாயக்கழிவு தண்ணீரை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பித்தது. மழை காலங்களில் வரும் வெள்ளநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக கனமழை பெய்தபோது குப்பகவுண்டன்வலசு குளத்துக்கு நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக மழை பெய்யமால் இருந்ததால் நொய்யல் ஆற்றில் மழை நீர் செல்லாமல் இருந்தது. திருப்பூர் சாக்கடை கால்வாய் தண்ணீர்தான் சென்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை, திருப்பூர் மாவட்டகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்வது அதிகரித்துள்ளது. தற்போது ஆற்றில் 400 கன அடி அளவில் தண்ணீர் செல்கிறது.

மழைநீரோடு சாயக்கழிவு நீர் கலந்து செல்வதால் நீரில் டிடிஎஸ் தன்மை 1300 ஆக உள்ளது. டிடிஎஸ் தன்மை 500 என்ற அளவில் இருந்ததால் தான் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். ஆனால் இப்போது நீரில் டிடிஎஸ் தன்மை அதிகரித்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது என்பதால் சின்ன முத்தூர் தடுப்பணையில் இருந்து ஆத்துப்பாளையம் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த வாரங்களாக கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்றின் மூலம் நீர் வரத்து பெற்று திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்குமேல் பாசனம் பெறும். சின்ன முத்தூர் தடுப்பணை பாசனத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெரும் வகையில் மழை பொழிவு அதிகமுள்ள சமயத்தில் கிடைக்கும் நொய்யல் ஆற்று நீரை பாசனப்பகுதிகளுக்கு திருப்ப வேண்டும்.

இதனால் கால்நடைகளுக்கு தேவையான தீவினங்கள் கிடைக்கும். சுற்று பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இப்போது டிடிஎஸ் அதிகரித்ததால் மழை பெய்தும் விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பூர் சாய ஆலையில் இருந்து வெளியேறும் தண்ணீரை நல்ல முறையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். ஆனால் அதை யாரும் செய்யாததால் பாசனத்துக்குப் பயன்படாமல் மழை நீர் வீணாகி வருகிறது. நொய்யல் நதியை நம்பி வாழும் வேளாண் குடும்பங்களில் மீண்டும் மகிழ்ச்சி மலர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசு, நிச்சயம் இதற்கு தீர்வு காண்பார்கள் என எதிர் பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.

 

The post கனமழை பெய்தும் நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக்கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Noyyal river ,Kangyam ,Noyal River ,Velliangiri ,Coimbatore ,Tirupur ,Erode ,Karur ,Cauvery ,Ootu canal ,Dinakaran ,
× RELATED வெள்ளகோவிலில் முருங்கை விலை உயர்வு:கிலோ ரூ.62க்கு விற்பனை