×

பழநி அருகே விவசாய நிலத்தில் பூஜை பொருட்களுடன் சமாதி வடிவிலான மர்மக்குழி

*இன்று குழியை தோண்டி போலீசார் விசாரணை

பழநி : பழநி அருகே மேல்கரைப்பட்டியில் தனியார் விவசாய நிலத்தில் பூஜை பொருட்களுடன் சமாதி வடிவிலான மர்மக்குழி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழநி அருகே மேல்கரைப்பட்டியில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை கனகராஜ் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். நேற்று அந்நிலத்தின் ஒரு பகுதியில் சமாதி வடிவில் குழி தோண்டி மூடப்பட்டிருந்தது. அந்த குழியின் மீது மஞ்சள் தூள் மற்றும் பூக்கள் தூவப்பட்டு, பூஜை செய்யப்பட்டது போன்ற நிலை இருந்தது.

அந்த குழியின் அருகில் பழநி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் மாணவியர்கள் அணியும் சீருடை கிடந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையிலான போலீசாரும், தாசில்தார் சக்திவேலன் தலைமையிலான வருவாய்த்துறையினரும் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக அப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவியர் யாரேனும் காணாமல் போய் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நரபலி ஏதும் கொடுக்கப்பட்டுள்ளதா?, வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு விலங்குகள் ஏதேனும் இறந்து, அதனை புதைத்துள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.
இன்று (மே 25) அதிகாலை 6 மணிக்கு மருத்துவர்கள் முன்னிலையில் குழியை தோண்டி விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் இதே பகுதியில் மயானத்தில் தலையில் இல்லாத மனித எலும்புக்கூடு எரிந்த நிலையில் மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆள் நடமாட்டமில்லாத விவசாய நிலத்தில் சவக்குழி போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பழநி அருகே விவசாய நிலத்தில் பூஜை பொருட்களுடன் சமாதி வடிவிலான மர்மக்குழி appeared first on Dinakaran.

Tags : Palani ,Melkaraipatti ,Kumaravel ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு