×

அய்யலூர் ஆட்டுச்சந்தையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுமா?

*விவசாயிகள், வியாபாரிகள் எதிர்பார்ப்பு

வேடசந்தூர் : அய்யலூர் ஆட்டுச் சந்தை நடைபெறும் இடத்தில் போதிய இடவசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது.

இங்கு வாரம்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடு மற்றும் கோழிகளை மொத்த விலைக்கு வாங்க அதிகளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர். இந்தப் புகழ்பெற்ற ஆட்டு சந்தையானது பேரூராட்சி கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியார் இடத்தில் நடந்து வருகிறது. தற்போது ஒரு வார காலமாக அய்யலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் ஆட்டுச் சந்தை நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வரும் சந்தையில் போதிய இடம் இல்லாமல் சகதிக்குள் வியாபாரம் செய்து வருகின்றனர். சில வியாபாரிகள் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அய்யலூர் புறவழிச்சாலையில் நின்று நேற்று வியாபாரம் செய்தனர். இதனால் நேற்று காலை அய்யலூர் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், ‘‘அய்யலூர் ஆட்டுச்சந்தை தனியார் இடத்தில் சந்தை நடப்பதால் மழைக்காலங்களில் சேறும் சகதிக்குள் நின்று தான் வியாபாரம் செய்ய வேண்டும். சேரும் சதிக்குள் நின்று வியாபாரம் செய்வதால் கால்களில் ஒரு விதமான தோல் நோய் ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, அய்யலூர் ஆட்டுச் சந்தை நடைபெறும் இடத்தில் போதிய இடவசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்’’ என்றனர்.

The post அய்யலூர் ஆட்டுச்சந்தையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Ayyalur goat market ,Vedasandur ,Dindigul district ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் வேடசந்தூர் அருகே...