×

தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு குத்திரபாஞ்சான் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை

*ஆபத்தை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகள்

பணகுடி : மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து குத்திரபாஞ்சான் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் செல்வது தொடர் கதையாகி வருகிறது.வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இதனால் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அருவிகள் மற்றும் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. களக்காடு தலையணையிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிகள், நீரோடைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பணகுடி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கன்னிமார் தோப்பு, அனுமன் நதி, குத்திரபாஞ்சான் அருவி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதகரித்து இருக்கிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குத்திரபாஞ்சான் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதலே தொடர் மழை பெய்வதால் நேற்று 2வது நாளாக வனத்துறை மற்றும் காவல்துறையினர், சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றுக்கு செல்ல தடை விதித்து உள்ளனர்.

இத்தடை உத்தரவு காரணமாக பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையில், காவல்துறையின் தடையை மீறி சிலர் ஆபத்ததை உணராமல் உள்ளே சென்று ஆற்றை கடந்து மறுபக்கம் செல்கின்றனர். கோடை மழை காரணமாக அருவி, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் தடையை மீறி நீர்நிலைகள், அருவிகளுக்கு செல்ல வேண்டாம் காவல்துறை, வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அக்னி நட்சத்திர காலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சீதோஷ்ண நிலை மாறி பணகுடி, வள்ளியூர், கலந்தப்பனை, தளவாய்புரம், நதிப்பாறை உள்ளிட்ட பகுதிகள் குளுமையாக மாறி உள்ளது. கோடை மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு குத்திரபாஞ்சான் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை appeared first on Dinakaran.

Tags : Gutrabanchan Falls ,Panagudi ,Gutrabanchan ,Western Ghats ,Gutrapanjan ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்...